Site icon Metro People

பெண்கள், குழந்தைகளின் கல்வியைக் காப்பாற்றுங்கள்: ஆப்கனுக்கு யுனெஸ்கோ வலியுறுத்தல்

தலிபான் தீவிரவாதிகளின் இடைக்கால ஆட்சி ஆப்கானிஸ்தானில் விரைவில் அமைய இருக்கும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வியைக் காப்பாற்ற வேண்டும் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் கடந்த மாதம் 31-ம் தேதியோடு வெளியேறியபின் அந்நாடு முழுமையாக தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. அங்கு இடைக்கால ஆட்சியை நிறுவும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். இடைக்கால அரசின் பிரதமராக அகுந்தஸாவும் இரு துணைப் பிரதமர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

கடந்த 1995-2001ஆம் ஆண்டு ஆட்சியைப் போல் இல்லாமல் பெண்கள், சிறுமிகளுக்குக் கல்வி உரிமை வழங்கப்படும். பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென பெண்கள் வேலைக்குச் செல்லத் தடையும், பெண்கள் விளையாட்டுக்குத் தடை விதித்தும் தலிபான்கள் உத்தரவிட்டனர்.

கடந்த 2002-ம் ஆண்டு ஆப்கன் மீது அமெரிக்கா போர் தொடுத்து, ஜனநாயக ரீதியிலான புதிய அரசு அமைந்தபின் அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டன. கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமைகள் வழங்கப்பட்டன.

இதனால் தலிபான்கள் ஆட்சியில் இருந்த பெண்களின் கல்வியறிவு ஜனநாயக ஆட்சி அமைந்தபின், இரு மடங்காக உயர்ந்தது. இந்நிலையில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி வந்துள்ளதால், பெண்கள், குழந்தைகள் கல்வி வளர்ச்சியைக் காப்பாற்ற வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கனில் அமெரிக்க, நேட்டோ படை பாதுகாப்பில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தபின், பள்ளிகளில், கல்லூரிகளில் பெண்கள், சிறுமிகள், உள்ளிட்ட மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. கல்வியுறிவு சதவீதமும் உயரத் தொடங்கியது.

கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியில் தொடக்கக் கல்வியில் சிறுமிகள் ஒருவர் கூட இல்லை. ஆனால், 2018-ம் ஆண்டில் 25 லட்சம் பெண் குழந்தைகள் தொடக்கக் கல்வி படித்து வந்தனர். தற்போது ஆப்கன் தொடக்கப் பள்ளியில் சிறுமிகளின் சதவீதம் 40 ஆக இருக்கிறது. ஆப்கனில் தலிபான் ஆட்சியில் இருந்ததைவிட தற்போது பெண்களின் கல்வியறிவு சதவீதம் இரட்டிப்பாகியுள்ளது.

ஆப்கனில் உள்ள பெண்கள், சிறுமிகளின் கல்விக்குப் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், தலிபான் ஆட்சிக்கு வந்தபின் அந்த உதவிகள் நிறுத்தப்பட்டன.

கல்லூரிகள், பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இணைந்து படிக்கும் முறைக்கும் தலிபான்கள் தடை விதித்தனர். இரு தரப்புக்கும் இடையே தடை விதிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. அதிலும் பெண்கள் பயிலும் வகுப்புகளில் ஆண் பேராசிரியர்கள் நியமிக்கக் கூடாது எனவும் தலிபான்கள் உத்தரவிட்டனர்.

மாணவ, மாணவிகள் இணைந்து படிக்க தலிபான்கள் தடை விதித்திருப்பதால், பெண்களின் உயர்கல்வியில் எதிர்மறையான விளைவுதான் ஏற்படும். அவர்களின் வாழ்க்கை, பணிச்சூழல், உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஷரியத் சட்டப்படி பெண்கள், சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனத் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் எதிர்காலத்தில் ஆப்கனில் உள்ள பெண்கள், சிறுமிகள் கல்வி பாதிக்கும் அபாயம் இருப்பதால், இப்போதுள்ள வளர்ச்சியைப் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

Exit mobile version