கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்க, வெள்ளி நகைகளைப் பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அறநிலையத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறியிருப் பதாவது:
கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும் தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கோயில் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு, அதற்குண்டான காணிக்கை ரசீதுகளை பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறையைத் தவறாது பின்பற்ற வேண்டும்.
பக்தர்கள் வழங்கும் நகைகள் மற்றும் பொருட்கள் அவர்களால் ஏற்கெனவே பயன்படுத்தி இருந்தாலோ அல்லது பரம்பரை நகையாக இருந்தாலோ, அதன் விவரம், மத்தியஸ்தர் எடை ரசீது, காணிக்கை வழங்கும் பக்தரின் அடையாள அட்டை நகல், சம்மதக் கடிதம் ஆகியவற்றைப் பெற்று, கோயில் காணிக்கை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
புதிதாகச் செய்யப்பட்ட நகையை வழங்கும்போது, அதன் எடை (ரசீதுடன்), தன்மை, வடிவமைப்பு, உருவாக்கத்தில் பயன்படுத்திய பொருட்களின் எடை, பொருட்கள் வாரியாக அதன் மதிப்பு, யாரால் செய்யப்பட்டது போன்ற விவரங்களுடன், கடையின் பண மதிப்பு ரசீது, மத்தியஸ்தர் எடை ரசீது, காணிக்கை வழங்கும் பக்தர்களின் அடையாள அட்டை, நிரந்தர முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றுக்கொண்டு, காணிக்கை ரசீது வழங்க வேண்டும்.
விலை உயர்ந்த கற்கள் பதித்த ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த நகைகளை ரசீதுடன் புகைப்படம் எடுத்து, காணிக்கை பதிவேட்டில் பதிய வேண்டும்.
அதிக எடை கொண்ட பொருட்களில், அவற்றின் உள்பாகத்தில் இருப்பு பதிவேடு எண், கோயில் பெயர், காணிக்கை தருபவரின் பெயர், வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றை பொறித்து, அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கோயிலுக்கு நேரடியாக வழங்கப்படும் தங்கம் மற்றும் விலை உயர்ந்த காணிக்கைகளை உரிய பதிவேட்டில் பதிந்து, நகைசரிபார்ப்பு அலுவலரின் தணிக்கைக்கு உட்பட்டது எனக் குறிப்பிட்டு, காணிக்கை ரசீதை உபயதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளை, உரிய காரணமின்றி பெற்றுக்கொள்ள மறுப்பதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த கற்கள் பதித்த ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த நகைகளை ரசீதுடன் புகைப்படம் எடுத்து, காணிக்கை பதிவேட்டில் பதிய வேண்டும்.