திருப்பூர்: பல்லடம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. வெட்டில் பட்டறை வேலை செய்யும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. தம்பதியருக்கு சரவணன் (24) மற்றும் மகள் வித்யா (22) என இரு பிள்ளைகள். சரவணன் பட்டப்படிப்பு முடித்துவிட்டு எலெக்ரிஷினியாக பணியாற்றி வந்தார். வித்யா கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 30-ம் தேதி வீட்டில் இருந்த பெற்றோர் தேவாலயத்துக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த பீரோ வித்யா மீது சரிந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வித்யாவின் உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில், திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி (25) என்ற இளைஞர் வித்யாவை காதலித்தாகவும், வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி கிராம நிர்வாக அலுவலருக்கு கிராம மக்கள் புகார் அளித்தனர்.
தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பல்லடம் வட்டாட்சியர் சபரிகிரி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மாலை தோண்டியெடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவினர் சடலத்தை உடற்கூராய்வு செய்தனர். அப்போது தலையின் பின்பக்கம் காயம் இருந்ததால், போலீஸார் சந்தேகத்தின் பேரில் வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும் சகோதரர் சரவணன் இருவரையும் போலீஸார் விசாரித்தனர்.இதையடுத்து, பல மணிநேர விசாரணைக்கு பிறகு, சரவணன் தனது தங்கை வித்யாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அதாவது வெண்மணி, வித்யாவை காதலித்து வந்த நிலையில், வித்யாவை படிப்பில் கவனம் செலுத்தும்படி அண்ணன் சரவணன் கூறியுள்ளார். படித்து முடித்தப் பிறகு இதைப் பற்றி பேசிக்கொள்ளலாம் என இருவரையும் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வித்யாவுக்கும், சரவணனுக்கும் மன வருத்தங்கள் எழுந்த நிலையில், கடந்த 30-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த தங்கை வித்யாவை, அண்ணன் சரவணன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டியும், தாக்கியும் கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் உடலின் மீது பீரோவை விழவைத்து விபத்து போல சித்தரித்ததும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது, பீரோ வித்யா மீது விழுந்ததால் இறந்தததாக கருதிய நிலையில், சரவணன் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர்,போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் வித்யாவை அரிவாளால் தலையில் வெட்டியும், அடித்தும் கொன்றதை ஒப்புக்கொண்டதால், சரவணன் மீது கொலை வழக்கு பதிந்த காமநாயக்கன்பாளையம் போலீஸார் இன்று (ஏப்.2) கைது செய்தனர்.
அதேபோல், வித்யா மற்றும் வெண்மணி ஆகிய இருவரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இது ஆணவக் கொலை இல்லை என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் – இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் தொடர்வது கடும் கண்டனத்துக்கு உரியது. பல்லடம் அருகே கல்லூரி மாணவி வித்யா கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்வதுடன், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இத்தகைய இழிசெயல் தொடராமல் தடுத்திடவும், நிரந்தர தீர்வு காணவும், உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தனிச்சட்டம் நிறைவேற்றிட வேண்டும்”, என்று அவர் கூறியுள்ளார்.