சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரை திருச்சியில் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதில், முக்கிய பங்கு வகிப்பது தேசிய நெடுஞ்சாலை துறை, வான்வழித்துறை, துறைமுகங்கள் துறை, நீர்வழி போக்குவரத்து ஆகும். இதன் மூலம் போக்குவரத்து மட்டுமல்ல, நாட்டின் ஏற்றுமதி வசதியும் மேம்படும். இதன்மூலம் பொருளாதாரம் உயரும். முன்பெல்லாம் சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல 15 மணி நேரம் ஆகும். நவீன தேசிய நெடுஞ்சாலையால் இப்போது 6 மணி நேரத்தில் செல்லலாம். மின்சார கட்டணம், சொத்துவரி கட்டணம் அதிகமாக உள்ளது. அதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
தலைநகரை சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தெரிவித்திருந்தார். சென்னையில் நெருக்கடி அதிகமாக இருப்பதால், அவ்வாறு மாற்ற முடியுமா என்பது தெரியவில்லை. திருச்சியில் காவிரி ஆறு ஓடுகிறது. வந்தே பாரத் ரயில்கள் விட்டிருக்கிறோம். நாகர்கோவிலில் ஏறி திருச்சிக்கு 3 மணி நேரத்தில் வந்துவிடலாம் என்று பேசினார்.
அப்போது, பேரவைத் தலைவர் மு.அப்பாவு குறுக்கிட்டு, ‘டெல்லியில் இருக்கும் தலைநகரை சென்னைக்கு கொண்டு வரலாம்’ என்றார்.
அதற்கு நயினார் நாகேந்திரன், ‘அப்படி கொண்டு வருவதற்கான வாய்ப்பு வரும். பரிட்சார்த்த முறையில் மழைக்கால கூட்டத் தொடரையாவது 7 நாட்கள் திருச்சியில் நடத்திப் பார்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.