6 மணி நேரத்தில் ரூ.25 லட்சம் ஜெயித்ததாக வெளியான செய்திக்கு புகழ் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் நடிகராக வலம் வருபவர் புகழ். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது. சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘எங்க சிரி பார்ப்போம்’ என்ற நிகழ்ச்சி வெளியானது. இதில் கலந்துகொண்டு 6 மணி நேரத்தில் 25 லட்ச ரூபாயை புகழ் ஜெயித்ததாகத் தகவல் வெளியானது. இதை வைத்துப் பலரும் செய்தியாக வெளியிட்டார்கள்.
இதனிடையே, சென்னையில் தனியார் கடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் புகழ். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் புகழ் பேசியதாவது:
“நிறைய படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். சந்தானம் அண்ணனுடன் 2 படங்கள் நடித்து முடித்துவிட்டேன். அதன் வெளியீட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதர படங்களுடைய அப்டேட் வந்து கொண்டிருக்கிறது. பெரிய படங்களுடைய அப்டேட்டை அவர்களே வெளியிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். கண்டிப்பாக அனைவருமே சந்தோஷமாக இருப்பீர்கள். அந்த மாதிரியான படங்களில்தான் நடித்துள்ளேன்.
‘எங்க சிரி பார்ப்போம்’ நிகழ்ச்சியில் ஜெயித்தேன். அந்தப் பரிசுத் தொகையை இருவருக்குப் பிரித்துக் கொடுத்தார்கள். மொத்த பரிசுத் தொகை ரூ.25 லட்சத்தில் எனக்கு ரூ.12.5 லட்சம் வந்தது. அதில் டி.டி.எஸ் பிடித்ததுப் போக மீதி ரூ.7 லட்சம்தான் வந்தது. அனைத்துச் செய்திகளிலும் ரூ.25 லட்சம் ஜெயித்தேன் என்று போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் கைக்கு வந்தது ரூ.7 லட்சம் மட்டுமே. அதையுமே ஊரில் வீடு கட்டக் கொடுத்துவிட்டேன்.
பிக் பாஸ் வீட்டிற்கு எல்லாம் செல்லவில்லை. என் வீட்டிற்குத்தான் செல்லவுள்ளேன். என் ரசிகர்களால்தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என் உயிர் பிரியும் வரை அவர்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பேன்”
இவ்வாறு புகழ் தெரிவித்துள்ளார்.