மணப்பாறை தொகுதியை திமுக-வைச் சேர்ந்த மண்ணின் மைந்தருக்கே ஒதுக்க வேண்டும் என உடன்பிறப்புகள் இப்போதே திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 2011-க்கு முன்பு வரை மணப்பாறை நகராட்சி, குளித்தலை சட்டமன்றத் தொகுதியுடன் இருந்தது. தொகுதி மறுசீரமைப்பின் போது, மருங்காபுரி தொகுதி கலைக்கப்பட்டு மணப்பாறை புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது.
சிறுபான்மையினர் ஓட்டுகள் கணிசமாக இருந்தும் 2011-ல் முதல் தேர்தலில் மணப்பாறை தொகுதியை அதிமுக-வே கைப்பற்றியது. அடுத்து வந்த தேர்தலிலும் அதிமுக எம்எல்ஏ-வான சந்திரசேகரே மீண்டும் போட்டியிட்டு வாகை சூடினார். 2021-லும் அவரே மீண்டும் போட்டியிட்டார். ஆனால், பெயர் கெட்டுக் கிடந்ததால் ஹாட்ரிக் வெற்றியை அவரால் பெறமுடியவில்லை.
இந்த மூன்று தேர்தல்களிலும் மணப்பாறை தொகுதியை கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கிவிட்டது திமுக. கூட்டணிக் கட்சிகளோ 3 முறையுமே தொகுதிக்கு தொடர்பே இல்லாத வெளியூர் வேட்பாளர்களை கொண்டு வந்து இங்கு நிறுத்தின. 2011-ல் காங்கிரஸ் சார்பில் சுப.சோமுவும் 2016-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முகமது நிஜாமும் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். 2021-ல் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்சமது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இப்படி மணப்பாறை தொகுதியை தொடர்ச்சியாக கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கி வருவதால் மாவட்ட அமைச்சரான கே.என்.நேரு மீது உள்ளூர் திமுக-வினர் ஒருவிதமான அதிருப்தியில் உள்ளனர். அதனால், இம்முறை திமுக-வைச் சேர்ந்த உள்ளூர் முகமே மணப்பாறையில் போட்டியிட வேண்டும் என கட்சித் தலைமைக்கு அவர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதனிடையே, சிட்டிங் எம்எஎல்ஏ-வான அப்துல்சமதுவுக்கு எதிராக திமுக-வுக்குள்ளேயே சிலர் உள்ளடி வேலைகளையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள், ‘எம்எல்ஏ அப்துல்சமது, திமுக-வினருக்கு எந்தக் காண்ட்ராக்டையும் கிடைக்கவிடுவதில்லை. இவரால் மற்ற கட்சியினர் தான் பலனடைகிறார்கள்’ என திமுக தலைமைக்கு புகார்களை தட்டிவிட்டு வருகின்றனர்.
ரேஷன் கடை பணியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி அப்துல்சமது பேரைச் சொல்லி ஒரு நபர் கட்டுக்கட்டாக பணம் வாங்கிய வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகி வைரலானது. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்துல்சமது தரப்பில் வளநாடு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. ‘எனது பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களை யாரும் நம்ப வேண்டாம்’ என்று அப்துல் சமது அறிக்கையும் வெளியிட்டார். இதனிடையே, இந்த வீடியோ-வை லீக் பண்ணியதே திமுக-வினர் தான் என்றும் பேச்சுக் கிளம்பி அடங்கியது.
இதுகுறித்து பேசிய அப்துல்சமது தரப்பினர், “பணம் வாங்கிய விவகாரத்தில் எம்எல்ஏ-வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் நேரடியாக திமுக-வினருக்குத் தான் ஒப்பந்தப் பணிகளை வழங்குகிறார். அவர்கள் தான் அதை மாற்றுக் கட்சியினருக்கு கைமாற்றிவிட்டு காசு பார்க்கின்றனர். இதுதொடர்பாக ஆதராபூர்வமாக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸிடம், எம்எல்ஏ விளக்கம் கொடுத்துள்ளார்” என்றனர்.
திமுகவினரோ, “மணப்பாறை தொகுதியை திமுக-வுக்கு ஒதுக்கினால், கனிமொழியின் நெருங்கிய தோழியான கவிஞர் சல்மா தொகுதியை கேட்டுப் பெற்றுவிடுவார். இதனால் தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்து போகும் என நினைத்து சிலர் அதற்கு குறுக்கே நிற்கிறார்கள். இதனாலேயே தொடர்ச்சியாக இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளிவிட்டு வருகிறார்கள்.
இந்த முறை மணப்பாறை தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும். அதுவும் மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஒன்றியச் செயலாளர் ராமசாமி, அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜ், பொருளாளர் குணசேகரன் உள்ளிட்டோர் அமைச்சர் அன்பில் மகேஸிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். மணப்பாறையில் திமுக போட்டியிட்டால் தான் கட்சியினர் உற்சாகமாகமடைவார்கள்; கட்சியும் வளரும்” என்கிறார்கள்.
இதுகுறித்து திமுக ஊடகப் பிரிவு இணைச்செலாளர் கவிஞர் சல்மாவிடம் கேட்டதற்கு, “மணப்பாறையை இந்த முறை கூட்டணிக்கு ஒதுக்காமல், திமுக-வே நேரடியாக களமிறங்க வேண்டும். அத்துடன் உள்ளூர் முகம் ஒருவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஸிடம் வலியுறுத்தி உள்ளனர். அவரும் கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்” என்றார். மணப்பாறையில் இம்முறை திமுக-வே போட்டியிடுமா?