காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு மற்றும் மாணவர் பிரிவு சார்பில் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த குடும்பத்தினரைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, நீதி கிடைக்க துணை இருப்போம் என உறுதியளித்தார். அப்போது அந்தச் சிறுமியின் தாயுடன் பேசியது தொடர்பான புகைப்படத்தை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
போக்ஸோ சட்டப்படி, பலாத்காரத்தால் பாதி்க்கப்பட்டச் சிறுமியின் புகைப்படம், அந்தச் சிறுமியின் குடும்பத்தார், பெற்றோர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதோ அல்லது நாளேடுகள், தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ சட்டப்படி குற்றமாகும், அது போக்ஸோ சட்டத்தின் விதிமுறை மீறலாகும்.
இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி, ராகுல் காந்தி,போக்ஸோ விதிமுறைகளை மீறிவிட்டதால், ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் எடுத்த நடவடிக்கையால் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார். ட்விட்டர் நிறுவனத்தின் விதியின்படி,விதிமுறை மீறல் நடந்தால், 24மணிநேரத்துக்கு சம்பந்தப்பட்ட நபரின் கணக்கு முடக்கப்படும். அதன்படி ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் கட்சி கூறுகையில், “ மத்திய அரசின் அதிகமான அழுத்தம், நெருக்கடி காரணமாகவே, ட்விட்டர் நிறுவனம் சார்பில் ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆதலால், டெல்லியில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தின் முன் இன்று இளைஞர் காங்கிரஸ் , மாணவர் அமைப்பு ஆகியவை சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என அந்தக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பாதி்க்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரக்கத்துக்கும், நீதிக்கும் ஆதரவாகக் குரல் எழுப்புவர்களின் குரலை நசுக்குகிறது. பிரதமர் மோடி அச்சப்படுகிறார் அதனால்தான் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளார். நீதியின் குரலை உங்களால் நசுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில் சுர்ஜேவாலா கூறுகையில் “ கடந்த 2-ம் தேதி தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் சார்பில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தையும் ட்விட்டரில்பதிவிட்டிருந்தனர். பாஜக முன்னாள் எம்.பி.யும், எஸ்சி ஆணையத்தின் உறுப்பினர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 3-ம் தேதி சிறுமியின் தாய் புகைப்படத்தை பதிவிட்டார் அது சரியாக உங்களுக்குத் தெரிகிறது. ஆனால், ராகுல் காந்தி நீதி கேட்டு அந்த சிறுமியின் தாயிடம் பேசிய புகைப்படத்தை பதிவிட்டது குற்றமா? “ எனத் தெரிவித்துள்ளார்.