புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் சிக்கந்தராவில் முஸ்லிம்களின் தர்கா உள்ளது. ராமநவமி அன்று இந்த தர்காவில் இந்து அமைப்பினர் காவிக் கொடி ஏற்றிவிட்டுத் தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெறுகிறது.
ராம நவமியை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். கோயில்களில் காலையிலிருந்தே சிறப்பு வழிபாடு மற்றும் மத நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றன.
ஊர்வலங்களில் கலந்து கொண்டவர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷத்துடன் காவிக் கொடிகள் ஏந்திச் சென்றனர். ராம பக்தி இசை மற்றும் ராமாயணக் காட்சிகளை சித்தரிக்கும் அலங்கார ஊர்திகளும் ஊர்வலங்களில் இடம்பெற்றன.
ராமநவமி நாட்களில் உ.பி.,யின் பல பகுதிகளில் கடந்த காலங்களில் கலவரம் நடைபெற்றதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல்துறையினர் விழிப்புடன் இருந்து மாநிலம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
பல்வேறு இடங்களில் உ.பி காவல்துறையினருடன் அதன் சிறப்பு படையான பிஏசியினரும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும், முக்கியப் பகுதிகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பில் இருந்தன.
தர்காவில் காவிக் கொடி.. பிரயாக்ராஜின் எல்லையிலுள்ள சிக்கந்தரா பகுதியில் சாலார் மசூத் காஜியின் தர்கா அமைந்துள்ளது. இங்கு திடீரென வந்த சில இந்து அமைப்பினர் தர்காவின் கூரையில் காவிக் கொடியை ஏற்றினர். தர்காவின் குவிமாடத்தில் ஏறி நின்றவர்கள் காவிக் கொடிகளை அசைத்து கோஷங்களையும் எழுப்பினர். இந்நிகழ்வைக் காட்சிப் பதிவுகளாக்கி அவற்றை சமூக வலைதளங்களிலும் பரப்பினர்.
இதனால், அப்பகுதியில் இஸ்லாமியர்களும் கூடிவிட பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த தகவல் கிடைத்து போலீஸார் வந்து நடவடிக்கை எடுப்பதற்குள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இவர்களில் சிலர் பிரயாக்ராஜின் சுஹல்தேவ் சுரக்ஷா சமான் மன்ச் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இப்பிரச்சினையில் காவல்துறை விசாரணை நடைபெறுகிறது.
சமீப நாட்களில் கலவரச் சூழலில் சிக்கிய சம்பலிலும் ராமநவமிக்காக ஷோபா யாத்திரை மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆனால், போலீஸாரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளால் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் அமைதியாகவே நடந்து முடிந்தன.