Site icon Metro People

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் நிறைவடையும்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் நிறைவடையும் என்று தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “சென்னையில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் கால்வாய் பணிகளில் ஒன்றிரண்டு தவிர மற்ற பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் நேரடியாக துறையின் செயலாளர், ஆணையர்கள், மற்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வரின் அறிவுரையின்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் நிறைவடையும்.

குறித்த நேரத்தில் ஒப்பந்தப்பணிகளை முடிக்காத இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த ஒப்பந்ததாரர்கள்தான், சென்னையைப் பொருத்தவரை,

ஒரே ஒப்பந்ததாரர் 10 இடங்களில் எடுத்துக் கொள்கின்றனர். அதனால்தான் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டுள்ளோம். அதுகூட இந்தமுறை கண்டறியப்பட்டுள்ளது, அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் இந்தமுறை தூர்வாரும் பணி, கடந்தமுறை 775 கி.மீ தான் தூர்வாரப்பட்டது.மொத்த கால்வாய் 5500 கி.மீ, நீளம் உள்ளது. ஏற்கெனவே உள்ள மழைநீர் வடிகால் 2078 கி.மீ, இந்தமுறை தூர்வாரும் பணி 90 கோடி ரூபாய் செலவில், 1088 கி.மீட்டருக்கு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.

Exit mobile version