புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை தரவுள்ளோம் என அம்மாநில கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அரசு உயர்நிலைப் பள்ளி (சிபிஎஸ்இ) புதிய கட்டிடத்தை கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று திறந்து வைத்தார். அக்கட்டிடம் மாணவர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டது.
அதையடுத்து இந்நிகழ்வில் அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, “நீட் பயிற்சி புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் 585 மாணவர்கள் இதில் சேர்ந்துள்ளனர். அதற்காக நகரத்தில் இரண்டு, கிராமத்தில் இரண்டு என நான்கு மையங்கள் அமைத்துள்ளோம். வரும் கல்வியாண்டில் வெகு விரைவில் புத்தகப்பை, ஷூ தரப்படும். ஸ்மார்ட் அடையாள அட்டை மாணவிகளுக்கு தர உள்ளோம். பெற்றோரே தங்கள் குழந்தைகள் எங்குள்ளார்கள் என்பதை மொபைல்போன் மூலம் அறியலாம். அரசு பள்ளிகளில் புகார் பெட்டிகளும் வைத்துள்ளோம்” என்றார்.
பின்னர் கூறுகையில், “ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் 157-க்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது, விரைவில் அந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும். பிளஸ் 1 வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் மாணவர்கள் 80 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்., வழக்கமான நடைமுறைப்படி தான் பிளஸ் 1 மறுதேர்வு நடைபெறுகிறது. தனியார் பள்ளிகள் கூட சிபிஎஸ்இ பாடத்துக்குகு மாறத் தயாராக உள்ளனர். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.