மேற்கு வங்க கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் குறித்து சிபிஐ விசாரணை அவசியமில்லை: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டு மேற்கு வங்க பணியாளர்கள் தேர்வாணையம் உருவாக்கிய கூடுதல் ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, “மேற்கு வங்க கல்வித்துறையில், தேவையான ஆலோசனைகள் மற்றும் ஆளுநரின் ஒப்புதலுடனும் தான் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதால் அதில் நீதிதுறையின் தலையீடுக்கு அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க ஆசிரியர் பணியிடங்கள் குறித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை இடைநிறுத்தி வைத்திருந்த உச்ச நீதிமன்றம் இன்று அந்தத் தீர்ப்பினை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த ரத்து உத்தரவு, கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவக்கியது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மட்டுமே கட்டுப்படுத்தும். இந்த ஆசிரியர்கள் பணியிட வழக்குத் தொடர்பான பிற அம்சங்களான, மாநிலத்தின் முன்னாள் கல்வியமைச்சர் பார்தா சாட்டர்ஜியின் கைது, குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட சிபிஐ-யின் மற்ற விசாரணை அம்சங்களுக்கு பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பணியாளர்கள் தேர்வாணையம் கூடுதலாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது கொல்கத்தா உயர்நீதிமன்றம், கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டது சட்டவிரோதம் என்று தெரிவித்திருந்தது. இந்த முடிவுத்தொடர்பாக அமைச்சரவை உறுப்பினர்களை விசாரணைக்காக காவலில் எடுக்குமாறு மத்திய புலனாய்வு முகமைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கு பின்னணி: மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016-ம் ஆண்டில் மாநில பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. மொத்தமுள்ள 24 ஆயிரத்து 640 ஆசிரியர் பணியிடங்களுக்கு 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 25 ஆயிரத்து 753 பேருக்கு ஆசிரியர் பணிக்கான நியமன ஆணையை மாநில அரசு வழங்கியது.

இந்த ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், பலர் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலை பெற்றதாகவும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ல் தீர்ப்பு வழங்கிய கொல்கத்தா உயர் நீதிமன்றம், 25 ஆயிரத்து 753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.