“இந்து சமய அறநிலையத் துறை இதுவரையில் ரூ.3,739 கோடியே 42 லட்சம் மதிப்பிலான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்திருக்கிறது” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இதுவரையில் 7450 திருக்கோயில்களுக்கு உழவாரப் பணிகள் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள திருக்கோயில்களுக்கு உழவாரப் பணிகளை விரிவுப்படுத்துவது, விரைவுப்படுத்துவது குறித்து இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
சபரிமலை யாத்திரை செல்லக்கூடி பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் தகவல் மையத்தை ஏற்படுத்தி, சபரி மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பக்தர்களுக்கு உதவி புரிவதற்கான திட்டங்களை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதேபோல், கார்த்திகை தீபத்தை பொறுத்தவரை, எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு திருவண்ணாமலைக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருக்கோயிலின் தீப ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்தாலோசனை செய்யப்பட்டது.
திருக்கோயில்களின் சார்பில் மீட்டெடுக்கப்பட்டிருக்கிற நிலங்கள் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு மேற்கொண்டு மீட்டெடுக்க வேண்டிய நிலங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. அந்த வகையில் இதுவரையில், 3739 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இந்து சமய அறநிலையத் துறை மீட்டெடுத்திருக்கிறது. 3557 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, இந்து சமய அறநிலையத் துறை நிலங்களை மீட்டெடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபின்னர், நிலுவையில் இருந்த வாடகை தொகை ரூ.254 கோடி அளவிற்கு வாடகை வசூலிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.