சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கை வேறு மாநிலத்தில் ஏன் விசாரிக்க வேண்டும் எனக் கேட்டு பேச முயன்றதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
இன்று (ஏப்.7) தமிழக சட்டப்பேரவை கூடியது. இதில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கவனம் ஈர்க்கும் வகையில், இவ்வாறு அவர்கள் பேட்ஜ் அணிந்திருந்தனர்.
தொடர்ந்து அவை கூடியதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை ஏன் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என கேட்டு பேச முயன்றதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை எனக் கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர், தொடர்ந்து அவையில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது” டாஸ்மாக் மற்றும் தொழில்துறையில் அண்மையில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டதற்கு எதிராக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை வேறு மாநில உயர் நீதிமன்ற விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று டாஸ்மாக் தரப்பில் கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி வழக்கை வேறு மாநிலத்துக்கு ஏன் மாற்ற வேண்டும் என கேட்டு பேச முயன்றோம். அதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை.
வழக்கு விசாரணையை தமிழக ஊடகம் மற்றும் பத்திரிகையின் பார்வையில் இருந்து திசை திருப்பவே இந்த ஏற்பாடு. ஏனெனில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்துள்ளது. தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்றம் நேர்மையான முறையில் வழக்கு விசாரணையை மேற்கொள்ளும். எங்கள் ஆட்சி காலத்தில் எங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழகத்தில் தான் எதிர்கொண்டோம்.
திமுக ஆட்சியில் மக்கள்தான் நொந்து நூலாகி உள்ளனர். கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என்பதை அனைவரும் அறிவோம். தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மீனவர்கள் மீது அக்கறை உள்ளது போல முதல்வர் ஸ்டாலின் தன்னை காட்டிக் கொள்கிறார். 9 மாத ஆட்சியில் எந்தத் திட்டமும் கொண்டு வர முடியாது. இவ்வாறு இபிஎஸ் தெரிவித்தார்.
செங்கோட்டையன் வெளியேறவில்லை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில் செங்கோட்டையன் அவையிலேயே அமைந்திருந்தார். அது அதிமுக தலைமை மற்றும் செங்கோட்டையன் தரப்பு இடையே உள்ள முரணை சுட்டும் வகையில் அமைந்தது.
7 பேர் சஸ்பெண்ட்: இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதாகைகளை பேரவையில் ஏந்தி வந்த 7 அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒரு நாள் அவை நடவடிக்கைகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.