ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) தொடர்ச்சியாக 3-வது தோல்வியைச் சந்தித்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை கோப்பையை வென்ற சாம்பியன் அணிகளில் ஒன்று (5 முறை-மற்றொன்று மும்பை இந்தியன்ஸ்), அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணி, இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி அவர்களை சாம்பியன்களாக உருமாற்றிய அணி போன்ற பெருமைகளைப் பெற்ற சிஎஸ்கே அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 தோல்விகளைப் பெற்றதுதான் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே. மற்ற 3 ஆட்டங்களில் தோல்வி கண்டது. இந்த 3 ஆட்டங்களிலும் வெற்றி இலக்கைத் துரத்தி அதை முடிக்க முடியாமல் திணறி விமர்சனக் கணைகளை வாங்கி வருகிறது சிஎஸ்கே அணி.
நேற்று முன்தினம் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 184 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் சிஎஸ்கே அணி வெற்றியைக் கோட்டை விட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சொற்ப ரன்களில் பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்தது சிஎஸ்கே அணியின் தோல்விக்கு வழிவகுத்து விட்டது. அதன் பின்னர் வந்த ஷிவம் துபேவும், ரவீந்திர ஜடேஜாவும் எளிதில் ஆட்டமிழந்து விட்டனர். தொடர்ந்து விளையாடிய விஜய் சங்கர் 54 பந்துகளில் 69 ரன்களும், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 26 பந்துகளில் 30 ரன்கள் குவித்தாலும் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.
குறிப்பாக ஒருநாள் போட்டிகளைப் போன்றும், டெஸ்ட் போட்டிகளைப் போன்றும் மந்த கதியில் விளையாடினார் விஜய் சங்கர். 9 ஓவர்களை (54 பந்துகள்) சந்தித்து விளையாடிய விஜய் சங்கர் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் மட்டுமே விளாசினார். தோனி 11-வது ஓவரிலேயே களத்துக்கு வந்துவிட்டாலும், அவரால் முன்போன்று அதிரடியாக விளையாட முடியவில்லை.
11-வது ஓவருக்குப் பிறகு எந்த ஒரு நிலையிலும் இரு வீரர்களுமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறினர். இதனால் சிஎஸ்கே அணியின் ஆமை வேக ஆட்டத்தை ரசிகர்கள் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.
மேலும், கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட் சரிவர செய்யவில்லை என்ற விமர்சனமும் வெளியாகத் தொடங்கியுள்ளது. ஓய்வறையில் கொடுக்கும் திட்டங்களையே ருதுராஜ் கெய்க்வாட் அதிகமாக செயல்படுத்திப் பார்க்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆடுகளம் மற்றும் சூழலுக்கு ஏற்பவும், களத்தில் நிற்கும் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்பவும் பந்து வீச்சுத் திட்டங்களை மாற்றுவதில் அவர் சிறப்பாகச் செயல்படவில்லை. இதுபோன்ற செயல்களில் முன்னாள் கேப்டன் தோனியிடமிருந்து, ருதுராஜ் கெய்க்வாட் பின்தங்கியே இருக்கிறார். களத்தில் எதிரணி பேட்ஸ்மேன் செட்டிலாகிவிட்டால், அவரை வீழ்த்தும் முக்கிய பந்து வீச்சாளரை பந்துவீச வைப்பார் தோனி. இந்த விஷயத்தில் ருதுராஜ் கோட்டை விட்டு வருகிறார்.
அவர் தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், வரும் போட்டிகளிலும் சிஎஸ்கே அணிக்கு சிக்கல்கள் ஏற்படும்.
தற்போது 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 10 ஆட்டங்கள் மீதமுள்ளன. இதில் குறைந்தது 7 ஆட்டங்களில் சிஎஸ்கே அணி வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது. பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என 3 துறைகளிலும் வியூகங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டுள்ளது.
பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா முதல் ஆட்டத்தில் மட்டுமே சிறப்பாக விளையாடினார். அதன் பின்னர் அவரது அதிரடியான ஆட்டம் வெளிப்படவில்லை. அதைப் போலவே டேவன் கான்வே (டெல்லி அணிக்கு எதிராக மட்டுமே களமிறங்கினார்), கேப்டன் ருதுராஜ், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோரிடமிருந்து சிறப்பான இன்னிங்ஸ்கள் வெளிப்படவேண்டும். மேலும், முன்னாள் கேப்டன் தோனியும் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பெஸ்ட் ஃபினிஷர் என்ற அவரது பெயர் நிலைக்கும். பவர்பிளே ஓவர்களில் மந்தகதியாக விளையாடாமல் அதிரடியாக ரன் குவிக்கும் பழைய பாணியை சிஎஸ்கே அணி வீரர்கள் கையில் எடுக்கவேண்டும். அது இல்லாத வரையில் வெற்றியை நினைத்துப் பார்ப்பது கடினமாகி விடும்.
அதேபோல், பவுலிங் துறையிலும் அதிக அளவில் சிஎஸ்கே அணி முன்னேற வேண்டியுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கலீல் அகமது மட்டுமே சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை எடுத்தார். முகேஷ் சவுத்ரி ரன்களை அதிகமாக வாரி வழங்கி வருகிறார். 4 ஆட்டங்களிலும் நூர் அகமது மட்டுமே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். கடைசி ஓவர்களில் மதீஷா பதிரனா அபாரமாக பந்துவீசி எதிரணியின் ரன் குவிப்பை மட்டுப்படுத்தி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். முகேஷ் சவுத்ரி, அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் சிறப்பான பந்துவீச்சை வழங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஃபீல்டிங்கிலும் அணி வீரர்கள் தங்களது மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும். இனி வரும் ஆட்டங்களில் இதைச் செய்தால் மட்டுமே சிஎஸ்கே அணி தன் மீது விழுந்துள்ள விமர்சனங்களை களைந்தெறிய முடியும்.