குமரி அனந்தன் மறைவு தமிழகத்தில் மது ஒழிப்பு முயற்சிக்கு பேரிழப்பு’ – அன்புமணி வேதனை

சென்னை: தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பது தான் குமரி அனந்தனின் உயர்ந்த நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அவரது மறைவு மது ஒழிப்பு முயற்சிக்கு பேரிழப்பாகும் என்று அவரது மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

குமரி அனந்தன் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸின் மூத்த தலைவரும், பெருந்தலைவர் காமராசரின் சீடருமான இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன் உடல்நலக்குறைவால் காலமானர் என்பதையறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தேசப்பற்று மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரான குமரி அனந்தன், இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். காமராசர் காலத்தில் இளைஞர் காங்கிரசின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், தமிழகம் முழுவதும் பயணம் செய்து கட்சியை வளர்த்தார்.

காமராஜரின் அன்பைப் பெற்று அவரது சீடராக மாறிய குமரி அனந்தன், காமராசரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் 1977-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

என் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டிருந்தவர். தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பது தான் அவரது உயர்ந்த நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அதை பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்று உறுதியாக நம்பினார்.

அண்மையில் கூட, உடல் நலிவடைந்த நிலையிலும் என்னுடன் தொலைபேசியில் பேசிய குமரி அனந்தன், தமிழகத்தில் எப்படியாவது மதுவை ஒழித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவரது மறைவு மது ஒழிப்பு முயற்சிக்கு பேரிழப்பாகும்.

குமரி அனந்தனை இழந்து வாடும் அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.