கள்ளக்குறிச்சி பள்ளியில் களவாடிச் சென்ற பொருட்களை திருப்பி தாருங்கள்… கிராமம் கிராமமாக தண்டோரா போடும் அதிகாரிகள்கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 12ம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில் மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி பள்ளி முன்பு நடைப்பெற்ற போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது.
இதில் 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தி தனியார் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அங்கிருந்த வாகனங்கள், பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி சூறையாடியதோடு, தீ வைத்தும் கொளுத்தப்பட்டது.
இந்த கலவரத்தை பயன்படுத்தி கொண்டு பள்ளிக்கு அருகில் இருந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளிக்குள் இருந்த மேஜை, நாற்காலிகள், வகுப்பறைகளில் இருந்த டேபிள், பென்ச், சமையல் பாத்திரங்கள், ஏசி இயந்திரங்கள், கணினிகள் என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி சென்றனர்.
இந்நிலையில் கலவரம் நடைப்பெற்ற போது தனியார் பள்ளியில் இருந்த எடுத்து செல்லப்பட்ட பொருட்களை எல்லாம் பள்ளி வளாகம் அருகே எடுத்து வந்து போட்டு விட்டு செல்லுமாறு சின்னசேலம் வருவாய் துறை அதிகாரிகளின் ஏற்பாட்டின் படி பள்ளியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளியை சுற்றியுள்ள கனியாமூர், விளங்கம்பாடி, வினைத்தீர்த்தாபுரம், இந்திலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்டோரா அடித்து சக்தி பள்ளியில் இருந்து கலவரம் நடக்கும் போது பொருட்களை தூக்கி சென்றவர்கள், அந்த பொருட்களை எல்லாம் கொண்டு வந்து பள்ளியில் போட்டுவிடுங்கள், இல்லையென்றால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என குரல் எழுப்பியபடி அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த தண்டோராவிற்கு அஞ்சியாவது தனியார் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை எல்லாம் திரும்ப பெற்றுவிடலாம் என வருவாய் துறை அதிகாரிகள் எதிர்ப்பார்கிறார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா?? நிறைவேறாதா?? பொறுத்திருந்து பார்ப்போம்.