Site icon Metro People

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் விழா ஒத்திவைப்பு: அண்ணாமலை

பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்படுகிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக சார்பில் ஜன.7 முதல் 12-ம் தேதி வரை 1,100 இடங்களில் ‘நம்ம ஊரு பொங்கல்’ கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதன் நிறைவு விழா மதுரையில் ஜன.12-ல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனச் சொல்லப்பட்டது.

தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை, விருதுநகரில் ஜன.12-ல் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும், அந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை மண்டேலா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடந்த இடத்தில் மாலை 5 மணி அளவில் நடைபெறும் பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி தற்போது ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது என்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை தகவல் தெரிவித்துள்ளார்.

அப்போது, அரசு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது குறித்து கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அண்ணாமலை, ”அரசு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது குறித்து மாநில அரசுதான் கூற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதுச்சேரியிலும் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி உறுதியாகவில்லை எனப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். ஜனவரி 12-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் இளைஞர் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என ஆளுநர் தமிழிசை தெரிவித்திருந்த நிலையில், ”பிரதமரின் வருகை தொடர்பாக மாநில அரசுக்கு எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை” என்று ஆட்சியர் வல்லவன் விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version