17 வருட கனவு நிறைவேறியது: சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது ஆர்சிபி அணி.

சென்னை – சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச முடிவு செய்தார்.

ஆர்சிபி அணிக்காக பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சால்ட். 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரை அவர் விளாசி இருந்தார். நூர் அகமது வீசிய 5-வது ஓவரில் சால்ட்டை அபாரமாக ஸ்டம்பிங் செய்து சிஎஸ்கே விக்கெட் கீப்பர் தோனி வெளியேற்றினார். கடந்த ஆட்டத்திலும் இதே போல நூர் அகமது பந்து வீச்சில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவை ஸ்டம்பிங் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல், 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை அவர் ஸ்கோர் செய்தார். தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பெட் செய்ய வந்தார். 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் கோலி. லிவிங்ஸ்டன் 10 ரன்களில் போல்ட் ஆனார்.

8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்களை எட்டி இருந்தது ஆர்சிபி. லிவிங்ஸ்டன் 10 ரன்களில் போல்ட் ஆனார். ஜிதேஷ் சர்மா 12 ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது ஆர்சிபி.

197 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி பேட்டிங் செய்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தார். எதிர்முனையில் ஆடிய ராகுல் 5 ரன்களில் நடையை கட்டினார்.

கேப்டன் ருதுராஜ் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். தீபக் ஹூடா, சாம் கர்ரன், ஷிவம் டூபே என அடுத்தடுத்து விக்கெட்கள் விழவே, ரவீந்திர ஜடேஜா மட்டுமே 25 ரன்கள் வரை சமாளித்தார். வழக்கமாக 7வதாக பேட்டிங் இறங்கும் தோனி இந்த முறை இறங்கவில்லை. அவருக்கு பதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7வதாக இறங்கினார். ஆனால் லியாம் லிவிங்ஸ்டன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 11 ரன்களில் வெளியேறினார்.

அடுத்ததாக இறங்கிய தோனி 16 ரன்களில் 30 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் கடைசி இரண்டு ஓவர்களில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டபோது அரங்கம் அதிர்ந்தது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விரட்டமுடியாமல் 20 ஓவர் முடிவில் 146 ரன்களுடன் சிஎஸ்கே தோல்வியை தழுவியது.

இதன்மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி வீழ்த்தியுள்ளது. கடைசியாக 2008ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி ஆர்சிபி-யிடம் தோற்றிருந்தது. அதன்பிறகு எந்த போட்டியிலும் ஆர்சிபி சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியிடம் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.