மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திரபாடி மீனவ கிராமத்தில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷணன் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது பூம்புகார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.முருகன், “சந்திரபாடி மீனவ கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைத்துத் தரப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா கிருஷ்ணன், “மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திரபாடி மீனவ கிராமத்தில், 26 விசை படகுகளும், 274 நாட்டுப் படகுகளும் உள்ளன. இங்குள்ள மீனவர்கள், மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்திடவும், மீன்களை சுகாதாரமான முறையில் கையாளவும் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால், பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே மீனவர்களின் சிரமங்களை களைந்திடும் வகையில், சந்திரபாடி கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில், படகு அணையும் சுவர், மீன்வலை ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் ஆகிய வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் சுமார் 550 மீனவக் குடும்பங்கள் பயன்பெறுவதோடு, அவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.