Site icon Metro People

மாணவியருக்கு ரூ.1000 உயர்கல்வி உறுதித் தொகை: அமைச்சர் கிதா ஜீவன் முக்கிய தகவல்

மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் ,முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது முதியோர்களுக்கான தனி கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது விரைவில் வெளியிடப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தொலைநோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர் இல்லங்களே கூடாது என்பதே அரசின் எண்ணம். ஆனால் சூழல் அப்படி இல்லை தனியாக இருப்பது முதியோர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால், முதியோர் இல்லங்களைத் தேடி பலர் வருகின்றனர் ‘ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 1-5 ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்படும்.

முதியோர் உதவித்தொகை வழங்கும் பணி இனி விரைவுபடுத்தப்படும்,  தாமதம் இருக்காது. காலை சிற்றுண்டி திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.விரைவில் திட்டம் தொடங்கப்படும்.பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது; விரைவில் வழங்கப்படும்.

18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்துகொள்வதும் குழந்தைத் திருமணம் என்றே கருதப்படுகிறது .குழந்தைத் திருமணத்தைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். விரைவில் நிலைமை மாறும் எண்ணிக்கை குறையும் என்றார்.

சத்துணவு முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை என கூறிய கீதா ஜீவன், தொடர்ந்து டெண்டர் கோரும் நிறுவனங்கள் பட்டியலில் கிறிஸ்டி நிறுவனமும் உள்ளது.
விலைப்பட்டியலைப் பொறுத்து டெண்டர் ஒதுக்கப்படும். சத்துணவுப் பணியாளர் நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி,  யு.கே.ஜி நடத்துவது குறித்த தெளிவான விளக்கத்தை கல்வித்துறை கொடுத்துவிட்டது .சமூக நலத்துறை சார்பில் எல்.கே.ஜி யு.கே.ஜி நடத்தப்படவில்லை எனவும் அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்தார்.

Exit mobile version