Site icon Metro People

2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.2,894 கோடி ஜிஎஸ்டி தொகை நிலுவை: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

தமிழகத்துக்கு 2020-21-ம் நிதி ஆண்டில் மட்டும் ரூ.2,894 கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகை தர வேண்டியது நிலுவையில் உள்ளது என மக்களவையில் நேற்று ஒன்றிய நிதி அமைச்சகம் தரப்பில் எழுத்துப்பூர்வ தகவல் அளித்துள்ளது. குளிர்கால கூட்டத்தொடரின் மக்களவையில், ஒன்றிய அரசால் மாநில அரசுகளுக்கு வழங்கபட வேண்டிய ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்பட்டதா?  இல்லையென்றால் நிலுவையில் உள்ள தொகை விவரங்கள் மற்றும் அவை எப்போது வழங்கப்படும் என்ற விவரங்களை எழுத்துப்பூர்வமாக மக்களவை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து அதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடந்த 2017-18, 2018-19, 2019-20 நிதி ஆண்டில் ஒன்றிய அரசால் வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மாநில அரசுகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாகவும் 2020-2021 நிதி ஆண்டில் 27 மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை ரூ.37,134 கோடி அளவுக்கு நிலுவையில் உள்ளது என மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.

இதில் 31 மாநிலங்களைக் கொண்ட ஒன்றிய அரசின் பட்டியலில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.6,723 கோடி நிலுவையில் உள்ளது என்றும், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தவொரு இழப்பீட்டுத் தொகையும் நிலுவையில் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2020-2021 நிதியாண்டில் ரூ.2,894 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை தர வேண்டியது நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலுவையில் உள்ள அனைத்து தொகைகளும் விரைவில் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் எனவும் ஒன்றிய நிதி அமைச்சகம் எழுத்து பூர்வமாக மக்களவையில் தெரிவித்துள்ளது.

Exit mobile version