Site icon Metro People

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரே நாளில் குவிந்த ரூ.5.43 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் நேற்று (மே 25) ஒரே நாளில் பக்தர்கள் ரூ.5.43 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல மாநிலங்களில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து முடிந்ததால், நாடு முழுவதிலுமிருந்து திருமலைக்கு பக்தர்கள் படை எடுத்து வருகின்றனர். கரோனா பரவல் குறைந்ததும் பக்தர்கள் பழைய படி திருமலைக்கு வர தொடங்கி விட்டனர். மேலும், திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 30 ஆயிரம் ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. இது வரும் ஆகஸ்ட் மாதம் வரை வழங்கப்பட்டு விட்டது. மேலும், தினமும் சர்வ தரிசன டோக்கன்களும், மலையேறி வருபவர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்களும் வழங்கப்பட்டு வருவதால் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. தற்போது தினமும் சுமார் 75 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு வரும் ஜூன், மற்றும் ஜூலை மாதத்தில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துகொண்ட பக்தர்களுக்காக திருமலையில் தங்கும் அறைக்கான முன்பதிவு செய்துகொள்ள ஆன்லைன் வசதியை தேவஸ்தானம் இணைய தளத்தில் வெளியிட்டது.

மேலும் வரும் ஜூன் மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்காக மதியம் 3 மணிக்கு ஆன்லைன் மூலம் தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் வெளியிடுகிறது.

இப்படியாக பழையபடி திருப்பதிக்கு பக்தர்கள் வர தொடங்கி விட்டதால், உண்டியல் வருமானமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.4 கோடி உண்டியல் வருமானம் இருந்து வரும் நிலையில், நேற்று புதன் கிழமை மட்டும் ஏழுமலையான் கோயில் உண்டியலில் ரூ.5 கோடியே 43 லட்சம் உண்டியல் காணிக்கை வந்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை மட்டும் சுவாமியை 76,148 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 39,208 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி இன்று காலை திருமலையில் 29 அறைகளில் பக்தர்கள் சர்வ தரிசனம் செய்ய காத்திருக்கின்றனர். இதனால் சுவாமியை தரிசிக்க 7 மணி நேரம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version