ஆக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பூசியின் செயல்திறன் 2 டோஸ் செலுத்திய 3 மாதங்களுக்குபின் குறைகிறது என்று புகழ்பெற்ற மருத்துவ இதழான லான்செட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்தில் இருந்து பெறப்பட்ட புள்ளவிவரங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்புடன் இருக்க பூஸ்டர் டோஸ் அவசியம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா இணைந்துதான் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரித்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்காட்லாந்தில் அஸ்ட்ராஜென்கா தடுப்பூசி செலுத்திய 20 லட்சம் மக்கள், பிரேசிலில் 4.20 கோடி மக்கள் ஆகியோரின் தரவுகளை அடிப்படையாக வைத்து ஆய்வாளர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஸ்காட்லாந்தைப் பொறுத்தவரை, 2-வது டோஸ் தடுப்பூசிசெலுத்தியபின் 2 வாரங்களுக்குப்பின், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவு 5 மடங்கு அதிகரிக்கிறது, சில நேரங்களில் 2 தடுப்பூசி செலுத்தியவர்களிடையே 5 மாதங்களுக்குப் பின் உயிரிழப்பும் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
2-வது தடுப்பூசி செலுத்தியபின் 3 வது மாதத்திலிருந்து தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் குறையத் தொடங்குகிறது. 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி 2 வாரங்களுக்குப்பின் கரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு இரு மடங்கு இருக்கிறது.
ஸ்காட்லாந்து மற்றும் பிரேசிலில் 2-வது டோஸ்தடுப்பூசி செலுத்தி 4 மாதங்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதும், சில நேரங்களில் உயிரிழக்கும் ஆபத்தும் அதிகரித்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
பிரிட்டனின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜிஸ் ஷேக் கூறுகையில் “ பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் முக்கியக் கருவி தடுப்பூசி. ஆனால், அதன் செயல்திறன் குறைகிறது என்பது கவலைக்குரியது. ஆக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியின் செயல்தின் குறைகிறது என கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி, அதிகபட்ச பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முயலலாம்” எனத் தெரிவித்தார்
ஸ்காட்லாந்து மற்றும் பிரேசிலில் உள்ள மக்கள் முதல் மற்றும் 2-வது தடுப்பூசிக்கு இடையே 12 வாரங்கள் இடைவெளியில்தான் செலுத்தினர். அப்போது ஸ்காட்லாந்தில் டெல்டா வைரஸும், பிரேசிலில் காமா வைரஸும் உச்சத்தில் இருந்தன. வைரஸ்களின் உருமாற்றத்தின் தாக்கம் காரணமாக தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பிரிட்டனின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்ரீநிவாஸ் விட்டல் கதிகீரெட்டி கூறுகையில் “ ஸ்காட்லாந்து மற்றும் பிரேசிலின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்ததில் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியின் செயல்திறன் பாதுகாப்பு அளிப்பதில் இருந்து குறைகிறது. ஆதலால் பூஸ்டர் தடுப்பூசிசெலுத்துவது குறித்த பரிசீலக்கலாம். 2 டோஸ் செலுத்தியிருந்தால், பூஸ்டர் டோஸ் செலுத்த முயலலாம்” எனத் தெரிவித்தார்