கரோனா பரவல் காரணமாக 20 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை சவுதி அரேபியா நீக்கியுள்ளது.
இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “கரோனா பரவல் காரணமாக 20 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கப்படுகிறது. எனினும் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்தான் சவுதிக்குள் அனுமதிக்கப்படுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கடந்த பிப்ரவரி மாதம் கரோனா பரவல் கடுமையாக இருந்தது. அப்போது ஐக்கிய அமீரகம், எகிப்து, லெபனான், அமெரிக்கா, துருக்கி, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், பிரேசில், அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சவுதி பயணத் தடை விதித்தது. தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் அந்நாடுகள் மீதான பயணத் தடையை சவுதி நீக்கியுள்ளது.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.