Site icon Metro People

தீபாவளிக்கு பின் பள்ளிகளை திறக்க வேண்டும்: தமிழக அரசுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச்மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் நோய் பரவல் தணிந்து வருவதைஅடுத்து 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் கடந்த செப்.1-ம்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து 1 முதல்8-ம் வகுப்புகள் வரை நவ.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கிடையே இந்தாண்டு தீபாவளிப் பண்டிகை வரும் நவ.4-ம்தேதி வருகிறது.

இதையொட்டி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது பெற்றோர் மத்தியில் சிறிது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் சிலர் கூறியதாவது:

பள்ளிகள் திறக்கப்பட்டால் வெளி மாவட்டங்கள், ஊர்களில் தங்கியுள்ள மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்புவார்கள்.

இவை நோய்த்தொற்று பரவலுக்கு வழிவகுக்கும். எனவே, பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு பெற்றோர், மாணவர் நலச்சங்கத்தின் தலைவர் அருமைநாதன் கூறும்போது, ‘‘பண்டிகைக் காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியாது. எனவே, பள்ளிகளை ஒருவாரம் ஒத்திவைத்து திறப்பதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்யவேண்டும்’’ என்றார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்கும் எண்ணம் எதுவும் தற்போதுஇல்லை. எனினும், தொடர்கோரிக்கைகள் வருவதால் அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’’என்றனர்.

Exit mobile version