Site icon Metro People

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் விற்கும் கடைகளுக்கு சீல்: ஐகோர்ட் உத்தரவு

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் , “மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக கிடைக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தவில்லை” என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் விற்கும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கொடைக்கானலுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டும். அனைத்து பேருந்துகளையும் சோதனை செய்ய வேண்டும். சோதனைக்கு வாகனங்களை நிறுத்தாத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய நிரந்தர படைகளை அமைக்க வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Exit mobile version