ராமநாதபுரத்தில், மாவட்ட அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கும், மாவட்டச் செயலாளரான காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ-வுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தமானது ஆளும் கட்சியினரை அலறவிட்டுக் கொண்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்துக்காரரான ராஜகண்ணப்பன் 2021 தேர்தலுக்கு முன்புதான் மீண்டும் திமுக-வில் சேர்ந்தார்.
சொந்த மாவட்டத்தில் அவரது சாதிக்காரரான (அமைச்சர்) கே.ஆர்.பெரியகருப்பன் மாவட்டச் செயலாளராக இருப்பதால் ஓர் உறைக்குள் இரண்டு கத்திகளை வைக்க விரும்பாமல் ராஜகண்ணப்பனை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நகர்த்தியது திமுக தலைமை.
அதன்படி முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அமைச்சராகவும் ஆனார் ராஜகண்ணப்பன். அதேசமயம், முதுகுளத்தூர் தொகுதியின் மைந்தரான ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அந்த சமயத்திலேயே, ஒருவர் வென்றால் மற்றவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விடுமே என்ற பதை பதைப்பு இரண்டு தரப்புக்கும் இருந்தது.
அதன்படியே, தேர்தலில் இருவருமே வென்றாலும் தனியாக ‘லாபி’ செய்து அமைச்சரானார் ராஜகண்ணப்பன். இதில் அப்செட்டான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தரப்பு, ராஜகண்ணப்பன் வட்டாரத்தோடு உரசிக் கொண்டே இருந்தது. இது பல நேரங்களில் அடிதடி வரைக்கும் போனது. இந்த ‘அக்னி நட்சத்திர’ அரசியலால் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆதரவாளர்கள் நடத்தும் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட பேனர்கள், போஸ்டர்களில் ராஜகண்ணப்பன் பெயரையோ, படத்தையோ போடாமல் தவிர்த்தார்கள்.
அதேபோல், ராஜகண்ணப்பன் தரப்பினர் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் பெயரையும் போட்டோவையும் தவிர்த்தார்கள். ஒரு கட்டத்தில் இந்தப் பஞ்சாயத்து திமுக தலைமை வரைக்கும் போனது. அறிவாலய பஞ்சாயத்துக்குப் பிறகு, இருவரும் சமாதானமாகி விட்டது போல் காட்டிக் கொண்டார்கள். ராஜகண்ணப்பன் தனது தொகுதிக்குள் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தால் மட்டும் ராமநாதபுரத்துக்குள் வந்து போனார்.
இதனிடையே, இருவருமே தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாவட்டத்தில் அரசு அலுவலர்களையும் அதிகாரிகளையும் பணியிட மாறுதல் செய்தனர். இருவரது ஆதரவாளர்களும் அரசுப் பணிகளிலும் தலையிட்டனர். இதனால், யார் சொல்வதைக் கேட்பது என்று தெரியாமல் அதிகாரிகளும் குழம்பிப் போனார்கள். இந்த தலையீடுகள் ஆட்சியர், எஸ்பி அலுவலகங்கள் வரைக்கும் போனது. இதனால் ஒருசில ஆட்சியர்கள் இங்கிருந்து பணி மாறுதல் வாங்கிக் கொண்டு போன சம்பவங்களும் நடந்தன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ராஜகண்ணப்பனும் காதர்பாட்சா முத்துராமலிங்கமும் அரசு நிகழ்ச்சிகளில் ஒன்றாக வந்து கலந்து கொண்டனர். ஆனால், இவர்கள் இருவரும் சமாதானமாக போக விரும்பினாலும் இருவரது ஆதரவாளர்களும் அதை விரும்பவில்லை.
திருவாடானையில் மார்ச் 3-ல், காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் முத்து மனோகரன் மாட்டு வண்டிப் பந்தயம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக வைக்கப்பட்ட ஃபிளெக்ஸ்களில் ராஜகண்ணப்பனின் பெயரையும் போட்டோவையும் போடாமல் தவிர்த்துவிட்டார்கள்.
இதனால் கடும் அதிருப்திக்கு உள்ளான ராஜகண்ணப்பன் விசுவாச வட்டத்தினர், “எங்கள் அமைச்சரை ஒதுக்கினீர்கள் என்றால் எங்கள் சமுதாய ஓட்டுகள் எதுவும் உங்களுக்குக் கிடைக்காது. தேர்தல் நேரத்தில் ஓட்டுக் கேட்டு வரும்போது எங்களது எதிர்ப்பைக் காட்டுவோம்” என வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டு காதர்பாட்சா தரப்பை எச்சரித்தனர்.
இதற்கு பதிலடியாக ராஜகண்ணப்பன் தரப்பும் ஏதாவது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ‘சமன்’ செய்யும் என்ற பேச்சு மாவட்ட திமுக வட்டாரத்தில் இப்போது அலையடித்துக் கொண்டிருக்கிறது.
கூப்பிடு தூரத்தில் தேர்தல் வந்து கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் இந்த நீயா நானா யுத்தம் கட்சியை எங்கு கொண்டுபோய் நிறுத்தப் போகிறதோ என கவலை தெரிவிக்கிறார்கள் நடுநிலையான திமுக-வினர்!