நடப்பு ஐபிஎல் சீசனின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். போல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் பவுண்டரி விளாசி, அடுத்த பந்தில் போல்ட் ஆனார் பிலிப் சால்ட். தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களத்துக்கு வந்தார். கோலி உடன் இணைந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசிய அவர், பெரிய ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை விக்னேஷ் புதூர் வீழ்த்தினார்.
மறுமுனையில் கோலி அதிரடியாக ஆடினார். 42 பந்துகளில் 67 ரன்கள் விளாசி அசத்தினார். 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அவர் விளாசினார். அவரது விக்கெட்டை 15-வது ஓவரில் கைப்பற்றினார் ஹர்திக் பாண்டியா. அதே ஓவரில் லிவிங்ஸ்டன் விக்கெட்டையும் கைப்பற்றினார். இப்படியாக 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது ஆர்சிபி.
222 ரன்கல் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, ரையான் ரிக்கல்டன் இருவரும் தலா 17 ரன்களுடன் வெளியேறினர். அடுத்து இறங்கிய வில் ஜாக்ஸ் 22 ரன்களுடன் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 28 ரன்கள் எடுத்தார்.
அடுத்து இறங்கிய திலக் வர்மா 29 ரன்களில் 56 ரன்கள் விளாசி அசத்தினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 42, நமன் தீர் 11, மிட்சல் சாண்ட்னர் 8 என 20 ஓவர்களில் அடுத்தடுத்து 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ். அதிகபட்சமாக ஆர்சிபி-யின் க்ருனல் பாண்டியா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
டி20 கிரிக்கெட்டில் 13,000+ ரன்கள் குவித்த கோலி: டி20 கிரிக்கெட்டில் 13,000+ ரன்களை குவித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் கோலி. மும்பை இந்தியன்ஸ் உடனான இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.