Site icon Metro People

ஷங்கரின் மகள் நாயகியாக அறிமுகம்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாவதற்குப் பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படம் ‘விருமன்’. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலா, ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. தங்களுடைய தயாரிப்பில் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாவதில் பெருமை என்று சூர்யா தெரிவித்துள்ளார்.மேலும், “தனது முதல் படத்தில் நடிக்க மகள் அதிதி முழுத் தயாரிப்புடன் வந்திருப்பதால் சினிமாவை விரும்புபவர்கள் அவர் மீது அன்பு காட்டுவார்கள் என்று நம்புகிறேன்” என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாவதற்குப் பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துகளை ட்விட்டர் பதிவில் தெரிவித்து வருகிறார்கள்.

‘விருமன்’ படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். செப்டம்பர் 18-ம் தேதி முதல் தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக யுவன், ஒளிப்பதிவாளராக செல்வகுமார், கலை இயக்குநராக ஜாக்கி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

Exit mobile version