பால், டீசல், மெட்ரோ, மின்சார கட்ட​ண உயர்வை கண்டித்து சித்தராமையா வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர்

கர்நாடகாவில் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து பாஜகவினர் நேற்று முதல்வர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கர்நாடகாவில் அரசு ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. பால் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலை ரூ.2 அதிகரிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ கட்டணம், குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் ஆகியவையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இதனை கண்டித்து பாஜக சார்பில் மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் புதன்கிழமை இரவு பெங்களூரு சுதந்திர பூங்காவில் கண்டன‌ போராட்டம் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.டி.ரவி, அஸ்வத் நாரயணா உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். பின்னர் பாஜக தலைவர்கள் அங்கேயே அங்கேயே படுத்து உறங்கினர்.

பின்னர் நேற்று காலை 10 மணியளவில் முதல்வர் சித்தராமையாவின் வீட்டை நோக்கி அவர்கள் ஊர்வலமாக சென்றனர். விஜயேந்திரா தலைமையிலான இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாஜக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா உட்பட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குமாரகுருபா சாலையில் உள்ள முதல்வர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது பாஜக நிர்வாகிகள், முஸ்லிம் இட ஒதுக்கீடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதையடுத்து எடியூரப்பா, ஆர்.அசோகா, விஜயேந்திரா உட்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியதாவது: கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு மக்களை பல்வேறு வழிகளில் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. கடந்த ஓராண்டில் பால் விலை, டீசல் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவற்றை 3 முறை உயர்த்தி உள்ளது. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இலவச திட்டங்களை அமல்படுத்துவதற்காக, அனைத்து மக்களுக்கும் கூடுதல் வரிச்சுமை ஏற்பட்டிருக்கிறது.

வாக்கு வங்கியை குறிவைத்து தற்போது அரசு ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறும் காங்கிரஸ், இந்த சட்டத்தின் மூலம் அவரை அவமதித்துள்ளது. இவ்வாறு முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.