Site icon Metro People

முடிவுக்கு வந்த தயாரிப்பாளர் சங்கத்துடனான சிம்புவின் பிரச்னை!

உடல் எடையை குறைத்து நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நல்ல பெயர் எடுத்து வரும் சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேசன் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சிம்பு மீதான தயாரிப்பாளர் சங்கத்தின் தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இடையிலான பிரச்சனையும் சுமூகமாக தீர்க்கப்பட்டு உள்ளது.

நடிகர் சிம்பு எங்கு இருந்தாலும் அங்கு சிறிதளவு வம்பும் இருக்கும். உரிய நேரத்தில் திரைப்படங்களை நடித்து முடித்து கொடுப்பதில்லை, படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவது, முன்பணம் பெற்றுக்கொண்டு திரைப்படத்தில் நடிக்காமல் இருப்பது என நடிகர் சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தயாரிப்பாளர் சங்கத்தில் குவிந்த வண்ணம் இருந்தன.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

AAA திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க தாமதம் செய்த சிம்பு தான், படம் நஷ்டம் அடைய முக்கிய காரணம் என படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தின் கதவுகளைத் தட்ட சிம்பு அடுத்தடுத்து நடிக்கும் மூன்று திரைப்படங்களின் வெளியீட்டின்போது தலா இரண்டரை கோடி ரூபாய் மைக்கேல் ராயப்பனுக்கு நஷ்ட ஈடாக வழங்க தயாரிப்பாளர் சங்கம் அறிவுரை வழங்கியது. இதேபோல இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் நடிக்க முன்பணம் பெற்று கொண்ட சிம்பு, அதனை திரும்ப தரவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி தரப்பு முறையிட்டது.

மேலும் பி.டி.செல்வகுமாரிடம் சிம்பு பணம் பெற்ற விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி, நேரடியாக தலையிட இந்த மூன்று விவகாரங்களில் பலனாக நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதித்து தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டது. மேலும் திரைப்படங்களில் தென்னிந்திய திரைப்பட சம்மேளன பணியாளர்கள் பணியாற்றவும் தயாரிப்பு சங்கம் தடை விதித்தது. ஆனால் தற்பொழுது உடல் எடையை குறைத்து நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நல்ல பெயர் எடுத்து வரும் சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேசன் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் தென்னிந்திய திரைப்பட பணியாளர் சம்பந்தமான பெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றி வருவதால் அந்த அமைப்புடன் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

இதன் காரணமாக பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இடையே நேரடி மோதல் உருவானது. இந்த மோதலைத் தவிர்க்க, சிம்பு விவகாரத்தை சுமூகமாக முடிக்க பலகட்ட பேச்சுவார்த்தைகள் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற துவங்கின. அதன் முடிவில், சிம்புவுக்கு வழங்கப்பட்ட முன் தொகையை திரும்ப பெறுவது தொடர்பான வழக்கை லிங்குசாமி தரப்பு சுமுகமாக முடித்துக் கொள்ள, மைக்கேல் ராயப்பன் விவகாரத்தில் முடிவு எதுவும் எட்டப்படாமலே சிம்பு நடிக்க போடப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் இனி சிம்பு திரைப்படத்தில் பெப்சி அமைப்பை சேர்ந்தவர்கள் பணியாற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version