புதுடெல்லி: இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான நிதின் காமத் நேற்று கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் சில்லறை முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியப் பங்குகளை வாங்கி வந்தனர். ஆனால் தற்போது மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்படும் ஒரு பெரிய வீழ்ச்சியானது, சில்லறை முதலீட்டாளர்களை பல ஆண்டுகளுக்கு பங்குச் சந்தைகளிலிருந்து விலக்கி வைக்கும்.
2008-ம் ஆண்டில் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு பிறகு இதே நிலைமைதான் ஏற்பட்டது. 2008-ல் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக மிகப்பெரிய அளவில் உலகில் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. அதுபோன்று மீண்டும் நடந்தால் சில்லறை முதலீட்டாளர்கள் பல ஆண்டுகளுக்கு பங்குச் சந்தையிலிருந்து விலகி வெகு தூரம் சென்றுவிடுவர். இவ்வாறு நிதின் காமத் தெரிவித்தார்.
பொருளாதார மந்தநிலை காரணமாக இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் 2008-ம் ஆண்டு மிகவும் மோசமான அமைந்தது. இந்தியாவிலுள்ள முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் நீண்ட காலமாக பங்குச் சந்தையின் பக்கம் வரவே இல்லை.