‘வீர தீர சூரன் 2’ ரிலீஸ் நாளில் நடந்தது என்ன? – தயாரிப்பாளர் விளக்கம்

விக்ரமின் ‘வீர தீர சூரன் 2’ பட வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கலின் பின்னணி என்ன என்பதற்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘வீர தீர சூரன் 2’. மார்ச் 27-ம் தேதி காலையில் வெளியாக வேண்டிய படம் அன்று மாலை தான் நீதிமன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வெளியானது. இதனால் சில குழப்பங்கள் ஏற்பட்டது. முதல் நாள் வசூலும் பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், “விக்ரம் சார், இயக்குநர் அருண்குமார், படக்குழுவினர், விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் என அனைவரிடமும் தாமதமான வெளியீட்டுக்கு மன்னிப்பு கேட்கிறேன். இது தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். இந்த வெளியீட்டு பிரச்சினைக்கு காரணம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பணப் பிரச்சினை அல்ல.

ஓடிடி உரிமையைப் பெற்றவர்களால் பட வெளியீட்டுக்கு முன்பு அந்த உரிமையினை விற்க இயலவில்லை. அந்த முதலீட்டை பாதுகாப்பதற்காக, ‘வீர தீர சூரன் 2’ கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் முழுமனதுடன் தலையிட்டு ஆதரித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக தயாரிப்பாளர் கதிரேசன் சார் மற்றும் அருள்பதி சார். கடவுளுக்கு நன்றி” என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஞ்சுரமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் 2’. ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால் இதன் முந்தைய பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.