சென்னை: திருத்தணி நகராட்சி சார்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள தினசரி நாளங்காடி வணிக வளாகம் திறப்பு விழா அழைப்பிதழில் காமராஜர் பெயர் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திருத்தணி நகராட்சி ம.பொ.சி. சாலையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக காமராஜர் பெயரில் இயங்கி வந்த தினசரி வணிக வளாகத்தை சமீபத்தில் திருத்தணி நகராட்சி நிர்வாகத்தால் புதுப்பிக்கப்பட்டு காமராஜர் பெயரை மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டது. அந்த முயற்சிக்கு எதிராக தமிழகத்தில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமாகா, பாமக, நாதக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி உள்பட பல அரசியல் கட்சிகளும் நாடார் சமுதாய அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததின் விளைவாக மாநில நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் சார்பில் திருத்தணியில் புதுப்பிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் தினசரி வணிக வளாகத்துக்கு காமராஜர் பெயரே தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் அறிவிப்பை உண்மை என நம்பி அனைத்து அரசியல் கட்சிகளும், நாடார் சமுதாய அமைப்புகளும், வணிக நிறுவனங்களும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். ஆனால் வருகின்ற 9-ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருத்தணியில் புதுப்பிக்கப்பட்டுள்ள நாளங்காடியை திறந்து வைப்பதாக அழைப்பிதழ் அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
காமராஜரின் பெயரை இருட்டடிப்பு செய்கிற வேலையில் திமுக அரசு கவனமாக செயல்பட்டுள்ளது இதனை வன்மையாக கண்டிக்கிறேன். 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து தமிழ்நாடு பெயர் வர காரணமாக இருந்து உயிர் தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனாரின் அகிம்சை வழியை பின்பற்றி காமராஜர் புகழுக்கு ஏற்படும் களங்கத்தை துடைக்க திருத்தணி நகரில் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்ய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தயாராக உள்ளனர் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
அகிம்சை வழியில் உயிரை கொடுத்தேனும் காமராஜர் புகழை காப்போம். காமராஜரின் பெயரை மறைத்து பொய்யர்களின் பெயரை முன்னிறுத்தி பெருந்தலைவர் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க நினைக்கும் திமுக அரசின் செயல்பாடுகளை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.