ஆம்னி பேருந்துகளுக்கு சுங்கச் சாவடிகளில் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் கொல்லிமலையில் நடைபெற்றது. இதில், ஆம்னி பேருந்து போன்ற பொதுப் போக்கு வரத்து வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள 1,228 சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை ஒரே நாளில் பதிவு செய்து இயக்க அரசு ஆவன செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் அனுமதிக்கும் ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட் பேருந்துகளை தமிழகத்திலும் அனுமதிக்க வேண்டும்.
ஆம்னி பேருந்துகளுக்கு தேவையில்லாமல் அபராதம் விதிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும். போக்குவரத்துத் துறை சேவைகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் செய்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும். ஓட்டுநர் செய்யும் போக்கு வரத்து விதி மீறல்களுக்கு ஓட்டுநர் உரிமம் மீது மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீ்ர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.