பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க இதுவே சரியான நேரம்: விஹெச்பி

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க இதுவே சரியான நேரம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் மினி ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காமில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது லஷ்கர்-இ-தொய்பா தொடர்புடைய பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இஸ்லாமியர்கள் அல்லாதவர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பயங்கரவாதிகள் இந்த படுகொலையை நிகழ்த்தினர் என்பதை முன்வைத்து மதரீதியிலான இந்த படுகொலையைக் கண்டிப்பதாக, டெல்லி ஜந்தர் மந்தரில் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விஹெச்பி – பஜ்ரங் தளம் தொண்டர்கள், பாகிஸ்தானின் உருவ பொம்மைகளை எரித்தனர். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராகவும், பயங்கரவாதத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதில் கலந்துகொண்டு பேசிய விஹெச்பி-யின் சர்வதேசத் தலைவர் அலோக் குமார், “பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திலிருந்து உலகை விடுவிப்பதற்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஜிஹாதி பிடியிலிருந்து விடுவித்து இந்தியாவுடன் மீண்டும் ஒருங்கிணைப்பதற்கும் நேரம் வந்துவிட்டது.

காஷ்மீர் மக்களின் செழிப்பு சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சம்பவத்தின் மூலம் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை ஒழித்து, பொருளாதார ரீதியாக முடக்க சதி தீட்டப்பட்டுள்ளது. இத்தகைய சதித்திட்டங்கள் வெற்றிபெறாது. இந்திய அரசு எடுத்த வலுவான ராஜதந்திர நடவடிக்கைகள் காரணமாக, தற்போது பாகிஸ்தான் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உட்பட உலகம் முழுவதும் உள்ள எந்தவொரு இந்திய எதிர்ப்பு கட்டமைப்பையும் முற்றிலுமாக அகற்றும் திறனை இந்தியா கொண்டுள்ளது. பாகிஸ்தான் இப்போது அதன் தவறுகளுக்கு தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *