Site icon Metro People

சென்னையில் புகையில்லா போகி – 89.5 டன் பழைய பொருட்களை மாநகராட்சியிடம் வழங்கிய பொதுமக்கள்

போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 89.5 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் பெறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகையின்போது பொதுமக்கள் பொருட்களை எரிப்பதால் காற்று மிகவும் மோசடைந்து மக்கள் சுவாசிக்க சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, அதிகாலை எரிக்கப்படும் துணிகள், டயர், டியூப், பிளாஸ்டிக் போன்ற நச்சுப் பொருட்களால், காற்றில் நச்சு நுண் துகள்கள் அதிகளவில் படிந்து, காற்று மாசை ஏற்படுத்துகிறது. அந்தக் காற்றை சுவாசிக்கும் ஆஸ்துமா நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறல் போன்ற உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், புகைமூட்டத்தால் விமான போக்குவரத்து முதல் சாலையோர போக்குவரத்து வரை பாதிக்கப்படுகிறது.

இவற்றை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி முதன் முறையாக, புது முயற்சியை எடுத்தது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேவையற்ற நிலையில் உள்ள டயர், டியூப், துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை, மாநகராட்சித் துாய்மைப் பணியாளர்களிடம் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி 8-ம் தேதி முதல் நேற்று (ஜன.11 ) வரை 89.5 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள், தூய்மைப் பணியாளர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் 14-ம் தேதி பொருட்களை வழங்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Exit mobile version