சென்னை: துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 70 காலியிடங்களை நிரப்புவதற்கான குருப்-1 தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. முதல்நிலைத் தேர்வு ஜூன் 15-ம் தேதி நடைபெறுகிறது.
துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஆகிய 6 விதமான பதவிகளில் 70 காலியிடங்களை நிரப்பும் வகையில் குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இத்தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் பதிவு நேற்றே தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக் கடைசி நாள் ஏப்.30-ம் தேதி ஆகும். முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வு ஜுன் 15-ம் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு மையம், பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்வாணையத்தின் இணைதளத்தில் (www.tnpsc.gov.in) விரிவாக அறிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு முதல்முறையாக தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் குருப்-1 தேர்வுடன் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பு இந்த தேர்வை தொழிலாளர் மேலாண்மை பாடத்தில் பட்டம் அல்லது டிப்ளமா பெற்றவர்கள் மட்டுமே எழுத முடியும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. தற்போது இந்த பதவி குருப்-1 தேர்வுடன் சேர்க்கப்பட்டிருப்பதால் அத்தேர்வுக்கான வயது வரம்பு இதற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, தொழிலாளர் மேலாண்மை படிப்பு படித்தவர்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் பதவிக்கு மட்டும் முன்பு போல் வயது வரம்பு தளர்வு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.