நிலக்கரி ரயில்களை வேகமாக இயக்குவதற்கான, நாடு முழுவதும் 620 பயணிகள் ரயில் பயணங்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்கள் இருளில் முழ்கி வருகின்றன. பல மாநிலங்களில் பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டள்ளது. தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில்கள் கூட இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்து, நிலக்கரி கொண்டு செல்லும் ரயில்களை வேகமாக இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி தற்போது வரை 620 பயணிகள் ரயில் பயணங்கள் (journeys) ரத்து செய்யட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பேசிய இந்திய ரயில்வே செயல் இயக்குநர் கவ்ரவ் கிருஷ்ணா பன்சால், “தற்போதைய அவரச காலச் சூழலில் எடுத்துள்ள தற்காலிக முடிவு இது. மின் நிலையங்களுக்கு வேகமாக நிலக்கரியை கொண்டு சேர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் சேவைகள் வழக்கம்போல இயங்கும்” என்று தெரிவித்தார்.
வரும் நாட்களில், நிலக்கரி கொண்டு செல்ல ரத்து செய்யப்படும் பயணிகள் ரயில் சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20.4 சதவீதம் அதிகமான நிலக்கரியை ரயில் மூலம் கொண்டு சென்றுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.