பழனிசாமி – அமித் ஷா சந்திப்புக்கு பாலம் போட்ட வேலுமணி!

“பாஜக-வுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தேய்ந்த ரெக்கார்டாய் பாடி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கும் சாக்கில் பாஜக முக்கிய தலைவர்களைச் சந்தித்து வந்த அதிமுக கொறடாவான எஸ்.பி.வேலுமணி, அமித் ஷா அண்ட் கோ உடன் தனியாக டீல் போட்டு அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாலம் அமைத்திருக்கிறார். இதை கோவை அதிமுக வட்டாரத்தில் இப்போது வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

எஸ்.பி.வேலுமணி மகன் திருமண வைபவத்தில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஒருவர் பாக்கி இல்லாமல் கலந்து கொண்டனர். இவர்கள் எல்லாம் வரும்போது பழனிசாமிக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கக் கூடாது என்பதற்காகவே கோவையில் தனியாக திருமண வரவேற்பையும் நடத்தினார் வேலுமணி. திருமணத்துக்கு வராத பழனிசாமி வரவேற்பில் கலந்து கொண்டார்.

கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை அதிமுக கோட்டையாகவே இன்னமும் இருக்கிறது. அதுவும் பாஜக-வுடன் கூட்டணி வைத்தால் கொங்கு மண்டலத்தில் அது அதிமுக-வுக்கு கூடுதல் பலத்தையே கொடுக்கும். இதன் காரணமாகவே, கொங்குமண்டல அதிமுக-வினர் பாஜக கூட்டணியை பெரிதும் விரும்பினார்கள். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்களுக்கும் இது தெரியும் என்றாலும் இத்தனை நாளும் அவர்கள் அதை வெளிப்படையாகப் பேசமுடியாமல் இருந்தார்கள்.

அதிமுக கூட்டணிக்கு விஜய் வராத நிலையில் பாஜக-வின் தயவு அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதுமாத்திரமல்லாது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள், தேர்தல் ஆணைய வழக்கு இவையும் அதிமுக தலைகளை யோசிக்க வைத்திருக்கிறது. இப்படியான சூழலில் இனியும் இறங்கி வராமல் இருந்தால் மற்றவர்களை வைத்து தான் நினைத்ததை பாஜக சாதித்துக் கொள்ளும் என தெரிந்து போனதாலேயே பழனிசாமி டெல்லிக்குப் புறப்பட தயாரானதாகச் சொல்கிறார்கள்.

அமித் ஷா – பழனிசாமி சந்திப்புக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழக பாஜக-வும் உற்சாகத் துள்ளலில் இருக்கிறது. அதேபோல் கொங்கு பெல்ட்டில் இருக்கும் அதிமுக-வினருக்கும் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் தான். இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் சிலர், “2026 தேர்தல் மட்டுமல்ல… 2029 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக-வுடன் கூட்டணி தொடர வேண்டும் என டெல்லி பாஜக தலைமை விரும்புகிறது.

இந்தக் கூட்டணியால் பாஜக-வால் கொங்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளை வென்றெடுக்க முடியும். இதை மனதில் வைத்து பாஜக தலைவர்கள் அதிமுக-வுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்” என்றனர். கோவை அதிமுக நிர்வாகிகளோ “அதிமுக எப்போது கூட்டணிக்கு வரும் என்று பாஜக-வினர் காத்துக்கிட்டு இருந்தாங்க.

இப்ப அவங்க நெனச்சது நடக்கப் போகுது. பழனிசாமியின் மனதை மாற்றியதில் எஸ்.பி.வேலுமணிக்கு முக்கிய பங்கிருக்கு. பழனிசாமி பிடிவாதமா இருந்திருந்தா வேலுமணி, செங்கோட்டையன் மாதிரியான ஆட்களை வெச்சு அமித் ஷா வேற கணக்குப் போட்டாலும் போட்டிருப்பார். ஆக, இந்த விஷயத்துல பழனிசாமி ராஜதந்திரமா தான் செயல்பட்டிருக்காரு.

அதேசமயம், இந்த முடிவை தான் மட்டும் எடுத்ததா இருக்கக் கூடாது, எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவா இருக்கணும்னு எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், தம்பித்துரை உள்ளிட்டவங்களயும் டெல்லிக்கு அழைச்சிட்டுப் போயிருக்காரு. பாஜக-வுடன் அதிமுக கூட்டணி வைக்கப் போகுதுன்னு நல்லாவே தெரியுது. ஆனா, கூட்டணி பத்தி பேசலைன்னு இன்னும் ஏன் பழனிசாமி பம்முறார்னு தான் தெரியல” என்றனர்.