அப்போது அவருக்கு முப்பது வயது. திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகியிருந்தன. வானவியல் துறையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை வெற்றிகரமாக முடித்திருந்தார் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன். வெற்றியில் திளைக்க வேண்டிய கஸ்தூரிரங்கன், இருதலைக் கொள்ளி எறும்பு போல தவித்துக் கொண்டிருந்தார்.
பழம் நழுவி பாலில் விழுந்தது போல, உலகளவில் பெரும் மதிப்புகொண்ட பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் லூயிஸ் அல்வாரெஸின் ஆய்வகத்தில், அவருக்கு மிகவும் பிடித்த வானவியலில் மேல் ஆய்வு செய்ய அழைப்பு வந்திருந்தது.
மறுபுறம், அவர் முனைவர் பட்டம் பெற்ற அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைவர் விக்ரம் சாராபாய், சில மாதங்களுக்கு முன்னர் இந்திய விண்வெளி நிறுவனம் (இஸ்ரோ)வை நிறுவியிருந்தார். அதில் வந்து சேருமாறு அழைப்பு.
எதைத் தேர்வு செய்வது? அவர் பொறியியல் மாணவன் அல்ல. எனவே பெரும் தயக்கத்தில் இருந்தார். மேலும், இஸ்ரோவை நிறுவி ஒரு சில மாதங்களே கடந்திருந்தது. இந்தியா போன்ற வறுமை சூழ்ந்த நாட்டில், எவ்வளவு தூரம் விண்வெளித் தொழில்நுட்பத்துக்கு வரவேற்பு இருக்கும் என்ற கவலை பலரிடம் இருந்தது.
விண்வெளியிலிருந்து எப்போதும் மழை போலப் பூமிமீது விழுந்துகொண்டிருக்கும் காஸ்மிக் கதிர்கள், எக்ஸ்-கதிர்கள், காமா கதிர்கள் குறித்த ஆய்வைத் தான் முனைவர் பட்ட ஆய்வுக்குத் தேர்வு செய்திருந்தார். அவருடைய ஆய்வு நெறியாளர்கள், பூமிமீது விழும் கதிர்களின் அளவை அளவிடக் கருவியை வடிவமைத்து, பலூன் மூலம் உயரே செலுத்தித் தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்யக் கூறியிருந்தனர்.
அதுபோலவே, கஸ்தூரிரங்கன் காஸ்மிக் கதிர்களை அளவிடக் கருவியை வடிவமைத்தார். பல கிலோமீட்டர் உயரம் வரை செல்லும் பலூன் தயார் செய்தார். அந்த பலூனில் பொருத்தி வானில் அனுப்பி, அந்தக் கருவி தரும் தரவுகளை ரேடியோ அலைவரிசையில் பெற்று ஆய்வு மேற்கொண்டார்.
இதன் ஊடே, உயரே பலூன் செலுத்துவது எப்படி, பலூன் செல்லும் பாதை வழித்தடத்தை மேலாண்மை செய்வது எப்படி, பலூனில் உள்ள ஆய்வுக் கருவி அளவிடும் தரவை மின்னணுத் தரவாக மாற்றுவது எப்படி, பலூனில் ரேடியோ அலைபரப்பியைப் பொருத்தி அதன் வழியே அளவிடும் கருவி திரட்டும் தரவைத் தரையில் கட்டுப்பாட்டு அறையில் பெறுவது எப்படி என ஒவ்வொரு கூறையும் கஸ்தூரிரங்கனே வடிவமைத்து, மேலாண்மை செய்து நிர்வகித்து மேற்கொள்ள வேண்டியிருந்தது.
“நான் பொறியாளர் இல்லையே; எனக்குத்தான் ராக்கெட் பற்றி ஏதும் தெரியாதே” என்று கலங்கி நின்ற கஸ்தூரிரங்கனைப் பார்த்து, கலகலவெனச் சிரித்து, அவரது ஆய்வுக் காலத்தில் செய்தது போல, திட்டத்தின் பல்வேறு கூறுகளைப் பிரித்து வேலைப் பிரிவினை செய்வது, அவற்றை ஒற்றுமைப்படுத்திப் பிணைப்பது போன்ற திறன்கள் இஸ்ரோவில் தேவை – பொறியாளர் பட்டம் அல்ல என்றார் விக்ரம் சாராபாய்.
சாராபாய் தந்த உத்வேகத்தில் இஸ்ரோவில் இணைந்த கஸ்தூரிரங்கன், முதலில் வெறும் நாற்பது கிலோ எடையுள்ள ரோஹிணி எனும் மைக்ரோசெயற்கைக்கோளைக் கட்டும் திட்டத்தில், யு.ஆர். ராவ் எனும் புகழ்மிக்க இந்திய விண்வெளி அறிஞரின் கீழ் பணியாற்றினார். இதற்கிடையில், இந்தியாவின் செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிறுத்த, தங்களது ராக்கெட்டுகளை தாராளமாகப் பயன்படுத்தலாம் என சோவியத் யூனியன் முன்வந்தது.
இதன் அடிப்படையில், 358 கிலோ எடையுள்ள ஆரியபட்டா எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துக் கட்டும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்த ஆரியபட்டா செயற்கைக்கோள் ஏவி சமீபத்தில்தான் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது திறமையைக் கண்டு வியந்து, பெங்களூரில் உள்ள செயற்கைக்கோள் கட்டும் இஸ்ரோ நிறுவனத்தின் இயக்குநராக கஸ்தூரிரங்கன் நியமிக்கப்பட்டார். பாஸ்கரா-1, பாஸ்கரா-2 ஆகிய சோதனைச் செயற்கைக்கோள்கள், ஐஆர்எஸ் எனும் முதல் தலைமுறைத் தொலையுணர்வு செயற்கைக்கோள்களையும் வடிவமைத்தார்.
1994-இல் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் படைத்தது. பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக இயக்கப்பட்டது இவரது காலத்தில்தான். மேலும், ஜிஎஸ்எல்வி முதல் தலைமுறை ராக்கெட்டும் இவரது காலத்தில்தான் செயல்பாட்டுக்கு வந்தது.
அதுவரை, இந்தியாவின் தொலைத்தொடர்புச் செயற்கைக்கோள்கள் (இன்சாட்-1) அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தாமே சுயகாலில் நிற்கும் விதமாக இன்சாட்-2 வகைச் செயற்கைக்கோள்களை வடிவமைத்துச் சாதனை செய்தார். 1994 முதல் 2003 வரை ஒன்பது ஆண்டு காலம் இஸ்ரோ தலைவராகப் பணியாற்றி, அனைவரின் நன்மதிப்பைப் பெற்றார்.
இஸ்ரோவில் குறிப்பிடத்தக்க சாதனையைத் தொடர்ந்து, பணிமூப்புக்குப் பிறகு நியமன ராஜ்யசபா உறுப்பினராகவும், பின்னர் இந்தியத் திட்டக்குழுவின் உறுப்பினராகவும் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். பின்னர், அவர் பெங்களூருவின் தேசிய மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் (NIAS) இயக்குநராகவும், கர்நாடக ஞான ஆயோகாவின் (KJA – கர்நாடக அறிவு ஆணையம்) தலைவராகவும் பணியாற்றினார்.
சர்வதேச வானியல் ஒன்றிய உறுப்பினராகவும், சர்வதேச விண்வெளி அகாடமியின் உறுப்பினராகவும், விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான ஐக்கிய நாடுகளின் மையத்தின் ஆளும் குழுவின் தலைவராகவும் இருந்தார். பொறியியலில் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, விண்வெளியில் ஸ்ரீ ஹரி ஓம் ஆசிரமம் டாக்டர் விக்ரம் சாராபாய் ப்ரீரிட் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
வானவியலில் பிர்லா நினைவு விருது, பயன்பாட்டு அறிவியலுக்கான ஸ்ரீ எம்.எம்.சுகானி நினைவு விருது, அறிவியல் தொழில்நுட்பத்தில் ஹெச்.கே.ஃபிரோடியா விருது, சாந்திநிகேதன் விஸ்வபாரதியின் ரதீந்திர புரஸ்கார் மற்றும் விண்வெளிக்கு சிறந்த பங்களிப்பிற்காக டாக்டர்.எம்.என்.சாஹா பிறந்தநாள் பதக்கம் என பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. இந்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய மூன்று விருதுகளையும் அவருக்கு வழங்கியது.
தொழில்நுட்ப முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் தொடர்ச்சியாக சமூக மற்றும் அரசியல் எழுச்சிகளின் தூண்டலின் நீட்சியாக, இந்தியாவின் சிக்கலான சமூகம் தீவிர படிநிலை அமைப்பிலிருந்து சமத்துவ அமைப்புக்கு மாறியது தான், தன்னைப் போன்ற ஒருவர் ஏழ்மையில் பிறந்தும் முக்கிய பதவிகளுக்கு உயர்ந்ததற்குக் காரணம் என சமீபத்தில் பதிவு செய்திருந்தார். இதேபோல, அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் மட்டுமல்லாமல், கலை, இலக்கியம், வரலாறு எனப் பல துறைகளில் பள்ளி-கல்லூரி கல்வி அமைந்தால் தான் முழு மனிதனாக வளர முடியும் எனவும் கூறியதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.