ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு மிகவும் நியாயமற்ற ஒரு ஆவணம்; நாங்கள் அதை ஒருபோதும் ஆதரித்ததில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் உமர் அப்துல்லா நேற்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான மத்திய அரசின் முடிவு, சுற்றுலா பயணிகளை காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சையத் அடில் ஹுசைன் ஷாவின் குடும்பத்திற்கான உதவி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஜம்மு – காஷ்மீரின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.
இவற்றுக்கு பதில் அளித்த உமர் அப்துல்லா, “சிந்து நதி நீர் ஒப்பந்தம் விவகாரத்தில் இந்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நாங்கள் ஒருபோதும் ஆதரித்ததில்லை. அந்த ஒப்பந்தம் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மிகவும் நியாயமற்ற ஒரு ஆவணம். இதனால் ஏற்படும் நடுத்தர மற்றும் நீண்ட கால தாக்கங்களை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய ‘குதிரை ஓட்டுநர்’ சையத் அடில் ஹுசைன் ஷாவின் துணிச்சலுக்கு அரசாங்கம் நிச்சயம் வெகுமதி அளிக்கும். அவர் காஷ்மீரியத்தின் சின்னம் மட்டுமல்ல, காஷ்மீரி விருந்தோம்பலின் சின்னம். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வெகுமதி அளிப்பது மட்டுமல்ல, அந்த நினைவை காலங்காலமாக உயிருடன் வைத்திருப்பதும் நமது பொறுப்பு. அதைச் செய்ய அரசாங்கம் ஒரு பொருத்தமான வழிமுறையைக் கண்டுபிடிக்கும்.
மகாராஷ்டிரா சுற்றுலா மற்றும் பயண நிறுவனம் ஒன்று, சையத் அடில் ஹுசைன் ஷாவின் குடும்பத்தினரை தத்தெடுத்து, அவர்கள் கல்வியை முடிக்கும் வரை அவர்களின் அனைத்து கல்வித் தேவைகளையும் கவனித்துக் கொள்ளவும், வரும் நாட்களில் குடும்பத்திற்கு உதவவும் முடிவு செய்துள்ளது.
இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்தத் தாக்குதல் எங்கள்(ஜம்மு காஷ்மீர் முஸ்லிம்கள்) பெயரில் நடத்தப்படவில்லை என்றும், அதற்கு அவர்கள் ஆதரவாக இல்லை என்றும், எதிர்காலத்திலும் நடக்காது என்றும் அவர்கள் தெளிவாகக் கூறினர். நடந்த சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க சில பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து பரிந்துரைகளும் செயல்படுத்தப்படும் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்துள்ளேன்.
ஜம்மு காஷ்மீருக்கு வெளியே காஷ்மீரிகள் துன்புறுத்தப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இந்த விவகாரத்தை எழுப்பினேன். மாணவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்புக்கு எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
உள்துறை அமைச்சரே இது தொடர்பாக சில முதலமைச்சர்களிடம் பேசியுள்ளார். நான் எனது சகாக்களுடனும் பேசியுள்ளேன், அத்தகைய இடங்களில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.