சான் பெட்ரோ: கரீபியன் நாடான பெலீசுவில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் அகின்யேலா டெய்லர் (49) சுட்டுக் கொல்லப்பட்டார்.
கரீபியன் கடல் பகுதியில் பெலீசு நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் கோரசோல் நகரில் இருந்து சான் பெட்ரோ நகருக்கு சிறிய ரக பயணிகள் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 14 பேர் பயணம் செய்தனர்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் அகின்யேலா டெய்லர் கத்தியை காட்டி பயணிகளை மிரட்டினார். விமானம் சான் பெட்ரோ நகரில் தரையிறங்கக்கூடாது. வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அவர் மிரட்டல் விடுத்தார். ஆனால் விமானி ஹோவல் கிரேஞ்ச் மிரட்டலுக்கு அடிபணியாமல் சான் பெட்ரோ நகரை நோக்கி விமானத்தை இயக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த அகின்யேலா டெய்லர், 3 பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தினார். தான் விரும்பும் இடத்துக்கு விமானத்தை திருப்பவில்லை என்றால் அனைத்து பயணிகளையும் குத்தி கொலை செய்வேன் என்று அவர் விமானிக்கு மிரட்டல் விடுத்தார்.
அப்போது விமானத்தில் இருந்த தொழிலதிபர் பிட்ஸ்ஜெரால்டு பிரவுண் (60) என்பவர் கைத்துப்பாக்கியால் அகின்யேலா டெய்லரை சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
சான்பெட்ரோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அகின்யேலா டெய்லரை, பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர். துப்பாக்கி குண்டு காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அகின்யேலா டெய்லரின் கத்திக் குத்து தாக்குதலில் 3 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “சான் பெட்ரோ நகரில் விமானத்தை தரையிறங்கவிடாமல் அகின்யேலா டெய்லர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் விமானி ஹோவல் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து வானில் வட்டமடித்தார். எரிபொருள் தீரும் நிலையில் சக பயணி பிட்ஸ்ஜெரால்டு பிரவுண் என்பவர் அகின்யேலா டெய்லரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.
விமான கடத்தலின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். பாதுகாப்பு குறைபாடு காரணமாக கத்தி, துப்பாக்கி விமானத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தனர்.