Site icon Metro People

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’- முதல்வர், அமைச்சருக்கு பேரவைத் தலைவர் நன்றி

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று கூறியது:

பள்ளிகளில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பு நடத்துவது பற்றிபேரவைத் தலைவர் கூறியிருக்கிறீர்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடர்ந்தீர்கள். அரசுப்பள்ளிகளில் 8, 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களால் ஆங்கிலத்தில் பேச முடிவது இல்லை.

பள்ளிக்கூட நேரத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தினால், வழக்கமான பாடத் திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு,6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும், 9, 10, 11, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும் பள்ளி நேரம் முடிந்த பிறகு அரைமணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

பேரவைத் தலைவர் அப்பாவு:இது நல்ல அறிவிப்பு. தமிழக மக்கள் சார்பாக நன்றி. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரைதமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசத் தெரியாமல் இருந்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளீர்கள். அதற்காக முதல்வருக்கும், உங்களுக்கும் நன்றி.

அமைச்சர்: மனப்பாடம் செய்துதேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடிவது இல்லை. எனவே, பாடங்களை புரிந்து படிக்க வேண்டும் என்பதற்காக 413 வட்டாரங்களில் கையடக்க கணினி மூலம் இந்த குறையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நபார்டு வங்கி,ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றிடம் இருந்து நிதி பெற்று புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Exit mobile version