டி 20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, தேவ்தத் படிக்கலுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
விராட் கோலி 17 ரன்களை எடுத்திருந்த போது அனைத்து வடிவிலான டி 20 கிரிக்கெட் போட்டியிலும் 13 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் டி 20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் விராட் கோலி. அதேவேளையில் உலக அரங்கில் 13 ஆயிரம் ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 42 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் விளாசினார். 403 ஆட்டங்களில் விளையாடி உள்ள விராட் கோலி 13,050 ரன்கள் குவித்துள்ளார்.