புதுமுகங்கள் மிதுன் வி, ரித்திக் எம், நிதின் டி,அப்துல் ரஃபே மற்றும் பிரார்த்தனா நடிக்கும் படம், ‘நாங்கள்’. கலா பவ கிரியேஷன்ஸ் சார்பில் ஜிவிஎஸ் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு வேத் ஷங்கர் சுகவனம் இசை அமைத்துள்ளார். இதை எழுதி இயக்கியுள்ள அவினாஷ் பிரகாஷ், படத்தின் ஒளிப்பதிவையும் எடிட்டிங்கையும் கையாண்டுள்ளார்.
படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது குழந்தைகள் பற்றிய படம். கண்டிப்பான தந்தையின் வளர்ப்பில் இருக்கும் 3 மகன்கள்,வாழ்க்கையை எப்படி கற்றுக் கொள்கிறார்கள் என்பது கதை. உளவியல் ரீதியான பிரச்சினைகளையும் இந்தப் படம் பேசும். சீரியஸான கதை என்றாலும் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கும். இதில் நடித்துள்ள அனைவரும் புதுமுகங்கள். மிதுன் வி, ரித்திக். எம், நிதின். டி ஆகியோர் மூன்று குழந்தைகளாக நடித்துள்ளனர். அப்துல் ரஃபே மற்றும் பிரார்த்தனா பெற்றோராக நடித்துள்ளனர்.
முக்கிய பாத்திரத்தில் ராக்ஸி எனும் நாய் நடித்துள்ளது. புது நடிகர்களைப் போன்று இல்லாமல் சிறந்த நடிப்பை அனைவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ரோட்டர்டாம், மோஸ்ட்ரா சாஓ பாவ்லோ, ஜியோ மாமிஉட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை வென்றபடம் இது. படத்தை எஸ்எஸ்ஐ புரொடக்ஷன் சார்பில் எஸ்.சுப்பையா, வரும் 18-ம் தேதி வெளியிடுகிறார்” என்றார்.