சென்னை: தமிழகத்தில் இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனையொட்டி தவெக தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களிடன் அன்பைப் பரிமாறி ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும், உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். வாழ்த்து அட்டையாக இதனை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வாழ்த்து அட்டையில் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் படங்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக அரசு தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பில், “ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட்டது. எனவே, திங்கட்கிழமை (இன்று) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில், திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்’ என தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.