முலான்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் தவறு எங்கு நடந்தது என்று தெரியவில்லை என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.
முலான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 பந்துகளில் 67 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 38 ரன்களும், நிதிஷ் ராணா 7 பந்துகளில் 12 ரன்களும், ஹெட்மயர் 20 ரன்களும் எடுத்தனர். ரியான் பராக் 25 பந்துகளில் 43 ரன்களை விளாசினார்.
பின்னர் 206 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 62, கிளென் மேக்ஸ்வெல் 30 ரன்கள் சேர்த்தனர்.
இந்த சீசனில் பஞ்சாப் அணி பெற்ற முதல் தோல்வியாகும் இது. அந்த அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி, ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டு 4 புள்ளிகளை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் தோல்வி கண்டது குறித்து கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது: இந்த மைதானத்தில் 180 முதல் 185 ரன்கள் வரை எதிரணி குவிக்கும்போது அதை சேஸிங் செய்ய முடியும் என்று நினைத்தேன். ஆனால் நினைத்ததை களத்தில் செயல்படுத்தி பார்க்க முடியவில்லை.
ஆடுகளம் நன்றாக இருந்தது. ஆனால், தோல்வி அடைந்தோம். எங்கு தவறு நடந்தது என்று தெரியவில்லை. எங்களது பேட்டிங், பவுலிங் திட்டங்களை சரிவர செயல்படுத்த முடியவில்லை. கடைசி நேரத்தில் விக்கெட்களை அதிக அளவில் இழந்தோம். எனவே, களத்துக்கு வரும் புதிய பேட்ஸ்மேன்களால் எங்களது திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. அடுத்து வரும் ஆட்டங்களை முழு கவனத்துடன் விளையாடி வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.