Site icon Metro People

T20 WC | ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்த அலெக்ஸ் ஹேல்ஸ்

மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து அணிக்காக அலெக்ஸ் ஹேல்ஸ் விளையாடுவார் என்பதை அந்நாட்டு ரசிகர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை தனது அசாத்தியமான மட்டை வீச்சால் இறுதிப் போட்டிக்குள் அழைத்துச் சென்றுள்ளார் ஹேல்ஸ். இந்தியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் அவர் 47 பந்துகளில், 7 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் விளாசி மிரளச் செய்தார்.

இத்தனைக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் முதலில் இடம்பெறவில்லை. கோல்ஃப் விளையாடும்போது ஜானி பேர்ஸ்டோவுக்குக் காயம் ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் விலகினார். இதனால் சுமார் மூன்றரை வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார் அலெக்ஸ் ஹேல்ஸ்.

கடந்த 2019-ம் ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு 21 நாட்கள் தடைவிதிக்கப்பட்டது. அப்போது 50 ஓவர் உலகக் கோப்பையை இங்கிலாந்து நடத்தியது. இதற்கான அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம் பெற்றிருந்தார். ஆனால் தடை காரணமாக 2 நாட்களில் உலகக் கோப்பையில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த பிரச்சினையால் அலெக்ஸ் ஹேல்ஸுக்கும் இங்கிலாந்து அணியில் மற்ற வீரர்களுக்கும் இடையே இருந்த நம்பிக்கையில் முழுமையான முறிவு ஏற்பட்டதாக அப்போதைய கேப்டன் மோர்கன் மனவேதனையை வெளிப்படுத்தினார். தனது ஒழுங்கீன செயல்களால் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி முதன்முறையாக உலகக் கோப்பையை கைகளில் ஏந்திய தருணங்களில் இல்லாதது ஹேல்ஸுக்கு மன வலியை கொடுத்தது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தடை விதிக்கப்பட்டாலும் தொழில்முறை டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார் அலெக்ஸ் ஹேல்ஸ். ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் டி20 லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர்களில் ரன் வேட்டையாடினார். கடந்த ஆகஸ்ட் மாதம் டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார் ஹேல்ஸ்.

இது ஒருபுறம் இருக்க மோசமான பார்ம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இயன் மோர்கன் ஓய்வு பெற்றார். இதனால் புதிய கேப்டனாக ஜாஸ் பட்லர் தேர்வானார். இதன் பின்னர் அணியின் சூழ்நிலை மாறியது. பேர்ஸ்டோ காயம் காரணமாக விலக மறுபுறம் ஜேசன் ராய் மோசமான பேட்டிங் பார்மால் அணியில் தனது இடத்தை இழந்தார். இதனால் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான கதவு திறந்தது.

மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு திரும்பிய அலெக்ஸ் ஹேல்ஸ், டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்ற இருதரப்பு டி 20 தொடரில் அரை சதம் அடித்து தனது மீள் வருகையை உலகிற்கு காண்பித்தார். அப்போது அவர், “இங்கிலாந்து அணிக்காக விளையாடாத மூன்றரை ஆண்டுகளை எப்போதும் மறக்க மாட்டேன்’’ என உருக்கமாக கூறினார்.

2019-ம் ஆண்டு சொந்த மண்ணில் இழந்த பெருமையை தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பையில் மீட்டெடுத்துள்ளார் அலெக்ஸ் ஹேல்ஸ். பிக் பாஷ் தொடரில் விளையாடிஉள்ள அனுபவத்தால் உலகக் கோப்பைக்கான ஆடுகளங்களை நன்கு அறிந்திருந்தார் ஹேல்ஸ். இதுவும் அவர், இங்கிலாந்து அணிக்குள் மீண்டும் பிரவேசிக்க காரணமாக அமைந்தது.

டி 20 உலகக் கோப்பையில் அலெக்ஸ் ஹேல்ஸ் 5 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 211 ரன்கள் விளாசி இங்கிலாந்து வீரர்களில் அதிக ரன்கள் குவித்தவராக உள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 148.59 ஆக உள்ளது. 10 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ள அவர், 19 பவுண்டரிகளையும் விரட்டியுள்ளார். அரை இறுதியில் இந்திய அணியின் கனவை சிதைத்த ஹேல்ஸ் கூறும்போது, “நான் மீண்டும் ஒரு உலகக் கோப்பையில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை, அதனால் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்றார்.

அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து சிதைத்ததில் அலெக்ஸ் ஹேல்ஸ் பிரதான பங்கு வகித்தார். இதன் மூலம் தன்னை மீண்டும் அணியில் சேர்த்ததற்கு நியாயம் சேர்த்துள்ளார். ஹேல்ஸின் வெறித்தனமான ஆட்டம் 2019-ல் அவர், செய்த தவறுகளை மறக்கடிக்க வைத்துள்ளது என்பது நிதர்சனம்.

Exit mobile version