கோவை: “புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. அண்ணாமலை டெல்லி சென்றார். அண்ணாமலை அவரைக் காட்டினார், இவரை கை காட்டினார் என்ற எந்த வம்பு சண்டைக்கும் நான் வரவில்லை. நான் போட்டியில் இல்லை,” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்.4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை தமிழக பாஜக வரவேற்கிறது. இந்த சட்டத் திருத்த மசோதா ஏழை இஸ்லாமியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த விவகாரத்தில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வழக்கம்போல குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். சில அரசியல் கட்சிகள் போராட்டம் எல்லாம் நடத்துகிறார்கள். எனவே, இச்சட்டத்தைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்க வேண்டியது எங்களுடைய கடமையாக நாங்கள் கருதுகிறோம்.
1913-லிருந்து 2013ம் ஆண்டு வரை மொத்தமாக இந்தியாவில் வக்பு வாரியத்தின் கீழ் இருந்த சொத்து 18 லட்சம் ஏக்கர். 2013-ம் ஆண்டிலிருந்து 2025 வரைக்கும் புதிதாக 21 லட்சம் ஏக்கர் சொத்துகள் கூடியிருக்கிறது. அப்படியெனில், மொத்தமாக இந்தியாவில், இன்றைக்கு வக்பு வாரியத்தின் கீழ் இருக்கக்கூடிய சொத்துகள் 39 லட்சம் ஏக்கர். இந்தியாவிலேயே அதிகப்படியான சொத்துகள் அவர்கள் கையில்தான் இருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், கடந்த 12 ஆண்டுகளில் மட்டும், 21 லட்சம் ஏக்கர் சொத்துகள் கூடியிருக்கிறது.
அதில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது. உதாரணமாக, திருச்செந்தூரில் ஒரு ஊரே வக்பு வாரியத்திடம் இருக்கிறது. கோயில் நிலங்கள் வக்பு வாரியத்தில் சேர்ந்துவிட்டது. இதனால் மக்களிடம் குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பத்துக்கு தீர்வு கொடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அதனால், இந்த சட்டத்தில் மத்திய அரசு ஒரு தீர்வைக் கொடுத்திருக்கிறது,” என்றார்.
அப்போது, பாஜகவின் புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. அண்ணாமலை டெல்லி சென்றார். அண்ணாமலை அவரைக் காட்டினார், இவரை கை காட்டினார் என்ற எந்த வம்பு சண்டைக்கும் நான் வரவில்லை. நான் போட்டியில் இல்லை,” என்றார்.
அதிமுக – பாஜக கூட்டணி அமைவதால்தான், மாநிலத் தலைமை மாற்றத்துக்கு காரணமா என்ற கேள்விக்கு, “அது தொடர்பாக நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும். நல்லவர்கள் இருக்கக் கூடிய கட்சி. நல்ல ஆத்மாக்கள் இருக்கக் கூடிய கட்சி. தங்களது உயிரைக் கொடுத்து பலர் இந்த கட்சியை வளர்த்திருக்கிறார்கள். புண்ணியவர்கள் இருக்கக் கூடிய கட்சி. எனவே, இந்த கட்சி எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவன் நான். என்னைப் பொறுத்தவரை, புதிய மாநிலத் தலைவர் தேர்ந்தெடுக்கும்போது நிறைய பேசுவேன்,” என்று அவர் கூறினார்.